ஐநாவின் மக்களைதொகை வரைபடத்தில் இந்தியாவின் அக்சாய் சின், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் எல்லைப் பகுதிகள் தனிப் பகுதியாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்தவையாகவும் காட்டப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் வெளியிட்டுள்ள உலக மக்கள்தொகை வரைபடத்தில் இந்தியாவின் தவறான வரைபடத்தை சித்தரித்துள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் இந்தியா சீனாவை முந்திவிட்டதாகவும் கூறி புதிய சர்ச்சையைத் தூண்டியுள்ளது.
வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இந்திய வரைபடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவின் வரைபடத்தைத் தவறாக சித்தரிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை தனித்தனி பகுதிகளாக காட்டப்பட்டுள்ளன.
அக்சாய் சின், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றின் சர்ச்சைக்குரிய எல்லைகள் தனிப் பகுதியாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவும் வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன. இவை இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டதாக காட்டப்படுகிறது. இதுகுறித்து வெளியுறவுத்துறை சார்பில் எந்த கருத்தும் இதுவரை வெளியாகவில்லை.
உலக மக்கள்தொகை வரைபடத்தின் கீழ், "இந்த வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள எல்லைகள் மற்றும் பெயர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரபூர்வ ஒப்புதல் மற்றும் ஏற்பைக் குறிக்கவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட வரைபடத்தில் இந்திய வரைபடம் தவறாக சித்தரிக்கப்பட்டது சர்ச்சையை எழுப்பியது. பின்னர் அதற்கு தனது இணையதளத்தில் மறுப்பு வெளியிட்டது. உலக சுகாதர நிறுவனத்தில் இணையதளத்தில் இடம்பெற்ற உலக வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவைச் சேர்ந்தவை அல்ல என்று தனி நிறத்தில் குறிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் மற்ற பகுதிகளை அடர் நீல நிறத்திலும் இரண்டு யூனியன் பிரதேசங்களை சாம்பல் நிறத்திலும் அந்த வரைபடம் காட்டியது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியான அக்சாய் சின், நீல நிற கோடுகளுடன் சாம்பல் நிறத்தில் இருந்தது.