
37 லட்சம் வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் வங்கிக் கணக்குக்கு வர வேண்டிய ரூ.167 கோடியை, ஏர்டல் நிறுவனம் தனது பேமெண்ட் வங்கிக்கு மாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நவீன மோசடி காரணமாக, பார்தி ஏர்டெல், ஏர்டெல் பேமெண்ட் வங்கி ஆகியவற்றுக்கு ஆதாரோடு இணைக்கப்பட்ட கே.ஒய்.சி. படிவத்தை சரிபார்க்கும் வசதியை ஆதார் வழங்கும் உதய் அமைப்பு நிறுத்திவைத்துள்ளது.
ஏர்டெல் சிம்கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களின் அனுமதியின்றி ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, தங்களின் வங்கிக்கணக்குக்கு வரும் அரசின் மானியத் தொகை, தங்களின் அனுமதியின்றி, ஏர்டெல் கணக்கிற்கு மாற்றப்படுகிறது என ஆதார் வழங்கும் உதய் அமைப்பிடம் புகார்கள் அளித்தனர்.
இதையடுத்து உதய் அமைப்பு ஏர்டெல் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையைத் தொடங்கியது. அந்த விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 31.21 லட்சம் பேருக்கு மத்திய அரசின் கியாஸ் மானியத் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த தொகை அனைத்தையும் அவர்களுக்கே தெரியாமல், அவர்களின் ஒப்புதல் இல்லாமல், ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளதை அதார் அமைப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏர்டெல் சிம் கார்டு வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆதார் கார்டை இணைக்க விவரங்கள் அளிக்கும் போது, அவர்களுக்கே தெரியாமல் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ள விவரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவரை இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திடம் இருந்து ரூ.40 கோடி, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திடம் இருந்து ரூ.39 கோடி, இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து ரூ.88 கோடி பணத்தை ஏர்டெல் பேமெண்ட் வங்கி பெற்றுள்ளது. இந்த பணம் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குக்கு செல்ல வேண்டியதை முறைகேடாக, ஏர்டெல் நிறுவனம் தனது பேமெண்ட் வங்கிக்கு மாற்றியுள்ளது.
இதையடுத்து ஏர்டெல் பேமெண்ட் வங்கியில் உள்ள பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திருப்பிக்கொடுக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களிடம் இருந்து முறையில்லாத வழியில் பெறப்பட்ட இந்த பணம் என்பது, ஆதார் சட்ட விதிகளை மீறியதாகும் எனஅதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஆதார் அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ வாடிக்கையாளர்களின் உண்மையான வங்கிக்கணக்குக்கு செல்ல வேண்டிய ரூ. 167 கோடியை ஏர்டெல் பேமெண்ட் வங்கியிடம் இருந்து பெற்று அவர்களுக்கு ஒப்படைக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு இருக்கிறோம். மேலும், ஏர்டெல் நிறுவனத்தின் மீதான விசாரணை முடியும்வரை, எந்த பேமெண்ட் வங்கிக்கும், வாலட்களுக்கும் அரசின் மானியங்கள் அனுப்பக்கூடாது எனக் கேட்டு இருக்கிறோம்” என்றார்.