
மும்பையில் சாகி நாகா-குர்லா பகுதியில் கைரனி சாலையில் இன்று அதிகாலை கடை ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
கைரானி சாலையில் மகாரியா காம்பவுண்டில் பானு ஃபர்சான் என்ற ஸ்நாக்ஸ் நொறுக்குத்தீனி கடையில் இன்று அதிகாலை 4.25 மணி அளவில் தீ பற்றியுள்ளது. இதனை ப்ரிஹன்மும்பை முனிசிபல் கார்பரேஷன் பேரழிவு மேலாண்மை மைய அதிகாரிகள் வந்து பார்வையிட்டு, உறுதிப் படுத்தினர்.
திங்கட்கிழமை இன்று அதிகாலை 4.25 மணியளவில் தீ பற்றியதை அடுத்து, தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின் மூன்று தீயணைப்பு வாகனங்கள், நான்கு ஜம்போ டாங்கர்கள், ஆம்புலன்ஸ்கள் விரைந்தன. பின்னர் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த மின்கம்பி மற்றும் மின் வயர் சுற்றில் ஏற்பட்ட கசிவின் காரணத்தால் இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. இதனால் கட்டடத்தின் ஒருபகுதி சேதமடைந்துள்ளது.
இந்தத் தீ விபத்தில் சிக்கிய 12 பேரை அங்கிருந்து மீட்டு காட்கோபர் புறநகர்ப் பகுதியில் அரசின் கட்டுப் பாட்டில் இயங்கும் ராஜவாடி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர்கள் அதற்கு முன்பே உயிரிழந்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.