கல்லூரி மாணவர்களுக்கு 450 மணிநேர இன்டர்ன்ஷிப்... யுஜிசி முடிவு என தகவல்!!

By Narendran SFirst Published May 13, 2022, 9:44 PM IST
Highlights

கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஆய்வுப் பயிற்சியின் நேரம் குறித்து யுஜிசி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஆய்வுப் பயிற்சியின் நேரம் குறித்து யுஜிசி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் தேசிய கல்விக் கொள்கையைப் படிப்படியாக அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தேசிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, ஆய்வுப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி, தனது இணையதளத்தில் விரைவில் வெளியிட உள்ளது. அதில், இரண்டு வகையான ஆய்வுப் பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். அதாவது மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலோ, ஆய்வு மனப்பான்மையை வளர்க்கவோ பயன்படுத்திக்கொள்ளலாம்.

4 ஆண்டுகால இளங்கலைப் படிப்பில் உள்ள 160 கிரெடிட்டுகளில் குறைந்தபட்சம் 20 கிரெடிட்டுகளைப் பெற மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதேவேளையில் சான்றிதழ் படிப்பு அல்லது டிப்ளமோ பட்டத்துடன் வெளியேற விரும்பும் மாணவர்கள், முறையே இரண்டாவது செமஸ்டர் அல்லது நான்காவது செமஸ்டரில் குறைந்தபட்சம் 8 முதல் 10 வாரப் பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும். பட்டப் படிப்பை முடிக்க விரும்பும் மாணவர்கள், இரண்டாவது அல்லது நான்காவது செமஸ்டர் தேர்வுக்குப் பிறகு விருப்பத்தின் அடிப்படையில் ஆய்வுப் பயிற்சியை மேற்கொள்ளலாம். அவர்கள் உயர் கல்வி நிறுவனங்கள் அல்லது ஆய்வு நிறுவனங்கள் அல்லது தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களில் ஆய்வுப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு ஆய்வுப் பயிற்சியாளரும் (இன்டர்ன்), தன்னுடைய பயிற்சிக் காலத்தில் 450 மணி நேர ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டும்.

இதில் 1 கிரெடிட் என்பது, ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 45 மணி நேர ஆய்வுப் பணியாகும். சான்றிதழ் அல்லது பட்டயப் படிப்பை முடிக்க விரும்பும் மாணவர்கள், 10 கிரெடிட்டுகளைப் பெற வேண்டும். அதாவது 450 மணி நேர ஆய்வுப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். 4 ஆண்டுகாலப் பட்டப் படிப்பு மாணவர்கள், ஆய்வுப் பயிற்சியில் 40 கிரெடிட்டுகளைப் பெற வேண்டியது அவசியம். மாணவர்கள் இந்த ஆய்வுப் பயிற்சியை (research internship), தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலோ அல்லது வேறு உயர் கல்வி நிறுவனங்களிலோ மேற்கொள்ளலாம். பயிற்சி மாணவர்கள் ஒவ்வொருக்கும் ஆய்வு மேற்பார்வையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார். இத்தகைய ஆய்வுப் பயிற்சிகளை நிர்வகிக்க, தனி ஆய்வுப் பயிற்சி இணைய முகவரியை அமைக்கலாம். இவ்வாறு யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

click me!