உதய்பூர் தையல்காரர் கொலையாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு உள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் அத்துமீறி நுழைந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கன்னையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து அவரது தலையை துண்டித்தனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ், கவுஸ் முகமது ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நபிகள் நாயகம் குறித்து தவறாக கருத்து தெரிவித்து இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் கன்னையா லாலை அவர்கள் படுகொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தால் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள், மோதல்கள் நடைபெற்றன. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக அப்போதே சில தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உதய்பூர் தையல்காரர் கொலையாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு உள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால், உதய்பூர் சம்பவம் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் எதிரொலிக்கிறது. கடந்த மாதம் சித்தோர்கரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கன்னையா லால் வழக்கில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு வாக்கு வங்கி அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உதய்பூர் தையல்காரர் கொலையாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு உள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மாநிலத்தில் நவம்பர் 25ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதற்றத்தை தூண்ட பாஜக முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜோத்பூருக்கு பிரச்சார பயணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு (என்ஐஏ) பதிலாக ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) வழக்கைக் கையாண்டிருந்தால், விசாரணைக்கு தர்க்கரீதியாக முடிவுரை எழுதப்பட்டிருக்கும்.” என்றார்.
இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவியை பறித்த பிரதமர் ரிஷி சுனக்!
சம்பவம் நடந்த அன்றே என்ஐஏ இந்த வழக்கை எடுத்துக்கொண்டதாகவும், அதற்கு மாநில அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார். “இந்த வழக்கில் என்ஐஏ என்ன நடவடிக்கை எடுத்தது என்பது யாருக்கும் தெரியாது. இதுவே எங்கள் ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு, இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தால், குற்றவாளிகள் இப்போது நீதியின் முன் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.” என்று அவர் கூறினார்.
“அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். அதுகுறித்து அறிந்தவுடன் நான் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு உதய்பூருக்கு புறப்பட்டேன். இருப்பினும், உதய்பூர் சம்பவத்தை அறிந்த பிறகும், ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவின் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.” என்று செய்தியாளர்களிடம் அசோக் கெலாட் தெரிவித்தார்.
“சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, தையல்காரர் மீது தாக்குதல் நடத்தியவர்களை மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்தனர். ஆனால், காவல்நிலையத்துக்கு நேரடியாக வந்த பாஜக நிர்வாகிகளின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.” என்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார்.