நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய இருவரும், "சர்வாதிகாரத்தை நிறுத்து, மணிப்பூரில் வன்முறையை நிறுத்து" என்று கோஷம் போட்டனர் என்று சொல்லப்படுகிறது.
நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய இரண்டு பேரும் மணிப்பூருக்கு ஆதரவாக மத்திய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூருக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய அவர்கள், "சர்வாதிகாரத்தை நிறுத்து, மணிப்பூரில் வன்முறையை நிறுத்து" என்று கோஷம் போட்டனர் என்று கூறப்படுகிறது. இருவரில் ஒருவர் தனது பெயர் நீலம் என்று வாக்குமூலம் அளித்தார் எனவும் தெரியவந்துள்ளது. தாங்கள் இருவரும் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் இன்று மேற்குவங்க பாஜக எம்.பி. காகென் முர்மு பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் அவைக்குள் குதித்தனர். கையில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற புகையை வெளியிடும் பொருளை வீசினார்.
சில எம்.பி.,க்கள் ஒன்று சேர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது, காவலர்கள் வந்து அவர்களைக் கைது செய்தனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்த பின்பும் புகை குண்டுகளை வீசி அரசுக்கு எதிராக முழக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் 2 ஆண், 2 பெண் என மொத்தம் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்தத் தாக்குதல் நடத்திய இருவரும் பாஜக எம்.பி. கையெழுத்திட்ட நுழைவு சீட்டை பயன்படுத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலால் டெல்லியில் அடுத்து நாடாளுமன்றத்துக்குச் செல்லும் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.