நாடாளுமன்றத்துக்குள் தாக்குதல் நடத்திய இருவரும் பாஜக எம்.பி. கையெழுத்திட்ட நுழைவு சீட்டை பயன்படுத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது
நாடாளுமன்ற மக்களவை இன்று வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. மேற்குவங்க பாஜக எம்.பி. காகென் முர்மு என்பவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர் அவைக்குள் திடீரென குதித்தனர்.
தொடர்ந்து, அவையில் மையப்பகுதிக்கு செல்ல முயன்ற அவர்கள், தாங்கள் கையில் மறைத்து வைத்திருந்த கண்ணீர் புகை குண்டு போன்ற பொருளை வீசினார். அதில் இருந்து வாயு வெளிப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த எம்.பி.,க்கள் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் தப்பிக்க முயன்று அவைக்குள்ளேயே சிறிது நேரம் ஓடியதுடன், வண்ணப் பொடிகளையும் வீசினர்.
parliament attack நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த இருவரால் பரபரப்பு; 4 பேர் கைது!
இதையடுத்து அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்த எம்.பி.க்கள், அவைக் காவலர்கள் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதேபோல், நாடாளுமன்றத்தின் வெளியேயும் இரண்டு பேர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 ஆண், 2 பெண் என மொத்தம் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்குள் தாக்குதல் நடத்திய இருவரும் பாஜக எம்.பி. கையெழுத்திட்ட நுழைவு சீட்டை பயன்படுத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு-குடகு மக்களவை தொகுதி பாஜக எம்.பி.யான பிரதாப் சிம்ஹா என்பவர் கையெழுத்திட்ட நுழைவு சீட்டை (entry pass) அத்துமீறி உள்ளே நுழைந்த இருவரும் பயன்படுத்தியதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை உறுப்பினர்கள் இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளனர்.