காஷ்மீரில் ஹிஜாப் அணிந்த இரட்டை சகோதரிகள் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்
தெற்கு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாட்டோ கிராமத்தில் வசிப்பவர் சயீத் சஜாத். அப்பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இமாமாக இருக்கும் இவருக்கு, மசூதியின் வளாகத்திலேயே ஒதுக்கப்பட்ட சிறிய வீட்டில் தனது மகள்களான சயீத் தபியா, சயீத் பிஸ்மா ஆகியோருடன் வசித்து வருகிறார். இரட்டையர்களான சயீத் தபியா, சயீத் பிஸ்மா ஆகியோர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளனர்.
காஷ்மீரின் ஊரக பகுதியில் வசித்து வரும் இமாமின் இரட்டை மகள்களின் இந்த நீட் தேர்வு வெற்றியானது, கல்விப் பாதையில் ஒருவரின் பயணத்தை ஹிஜாபோ அல்லது மதரஸாவோ தடை செய்யாது என்பதை நிரூபித்துள்ளது
இமாமான சயீத் சஜாத்தை இந்தியா முழுவதும் எந்த மசூதியிலும் பார்க்க முடியும், அவருக்கென வாழ்வாதாரம் எதுவும் பெரிதாக இல்லை. இஸ்லாம் மதத்தை மட்டுமே படித்தவர் அவர். ஆங்கிலம் அல்லது நவீன கல்வி பற்றி பெரிதாக அறியாதவர். இருப்பினும், கல்வியே முக்கியம் என கருதிய அவர், தனது மகள்களை நன்றாக படிக்க வைத்தார்.
இதுகுறித்து உணர்ச்சி பொங்க பேசிய சயீத் சஜாத், அல்லாஹ் தனது பிரார்த்தனைகளுக்கு செவிசாய்த்துள்ளான் என்றும், தனது மகள்கள் மருத்துவக் கல்வியை முடித்த பிறகு சமுதாயத்தில் மிகவும் நலிவடைந்தவர்களுக்கு சேவை செய்யுமாறு அறிவுரை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
அவரது கிராமமான வாட்டோ, குல்காமில் இருந்து வெகுதூரத்தில் அமைந்துள்ளது, அங்கு இணைய வசதி கூட அவ்வளவாக கிடையாது. தடையில்லா இணைய வசதியை பெற்றிருக்கவே வசதி படைத்தவராக இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் கல்விக்கு குறிப்பாக, நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இணைய வசதி மிகவும் முக்கியமானதாக இருக்கும் நிலையில், சிறிய கிராமத்தில் வசிக்கும் இரட்டையர்களான சிறுமிகள் நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளனர்.
தனது மகள்களுக்கு சிறந்த கல்வி வழிகாட்டுதலை வழங்குவதில் உறுதியாக இருப்பதாக சஜாத் கூறுகிறார். ஏராளமான நபர்களை தொடர்பு கொண்டதாக கூறும் அவர், தனது மகள்களுக்கு அவர்களின் இலக்குகளை நிர்ணயிக்க பயனுள்ள ஆலோசனைகளை அவர்கள் வழங்குவர் என நம்பியதாக தெரிவிக்கிறார். ‘தேர்வுக்கான குறிப்புகள், பயிற்சி மையங்கள் பற்றிய தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து எனது மகள்களுக்க்கு வழங்குவேன். அது அவர்களை மேலும் படிக்க தூண்டியது’ என சஜாத் கூறியுள்ளார். இரைட்டையர்களான தபியாவும், பிஸ்மாவும் பிளஸ்2 தேர்வை முடித்ததும், ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற மிஷன்இ பயிற்சி மையத்தில் சேர்க்கை பெற யாரோ ஒருவர் உதவியதாக சயீத் சஜாத் தெரிவித்துள்ளார்.
பெண்களிடம் பொருளாதார தலைமை: ஸ்மிருதி இரானி பேச்சு!
தன்னையும் தன் சகோதரியையும் போன்ற மாணவர்களுக்கு எல்லாவற்றையும் விட சரியான வழிகாட்டுதலும் ஊக்கமும் தேவை என்று சிறுமி பிஸ்மா கூறியுள்ளார். “எங்கள் தந்தை எங்களுக்கு எல்லா வழிகளிலும் உதவினார். அவர் எங்களை மிஷன்இ பயிற்சி மையத்துக்கு அழைத்து சென்றது எங்களுக்கு நடந்த மிகச் சிறந்த விஷயம். அங்கிருந்த அனைவரும் எங்களை மிகவும் நட்புடன் நடத்தினார்கள். எல்லா ஆசிரியர்களும் நாங்கள் அபாரமான திறமைசாலிகள், எந்தத் தேர்விலும் எளிதாகச் சாதிக்க முடியும் என்று நம்ப வைக்க முயற்சித்தார்கள்.” என உற்சாகமாக கூறுகிறார் பிஸ்மா.
டாக்டர் படிப்புக்கு அட்மிஷன் கிடைக்கும் என்பது நாங்கள் இருவருமே நினைத்து பார்க்க முடியாத ஒன்று என அவரது சகோதரி தபியா தெரிவித்துள்ளார். “ஆனால், எங்களது பெற்றோர்கள் எங்களுக்குத் தேவையான அனைத்தையும் தங்களின் சொற்ப வளங்களில் இருந்து வழங்கினர். அவர்கள் எங்களை ஒருபோதும் எதுவும் இல்லை என உணர அனுமதிக்கவில்லை.” என்கிறார் தபியா. தங்களை போன்ற மாணவர்கள் போராட்டக்காரர்கள் என்றும், கடின உழைப்பு மட்டுமே அவர்களது வாழ்க்கையின் ஒரே மந்திரம் என்றும் தபியா தெரிவித்துள்ளார்.
தங்கள் தந்தை இமாமாக இருப்பது, ஹிஜாப் அணிவது போன்ற கேள்விகளுக்கு பதிலளித்த இரட்டை சிறுமிகள், இவை எதுவும் தடையாக இருப்பதாக தாங்கள் ஒருபோதும் உணரவில்லை; மாறாக, எங்கள் இஸ்லாமிய வளர்ப்பு மிகவும் ஒழுக்கமாகவும் வாழ்க்கையில் கவனம் செலுத்தவும் உதவுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த இரட்டை சகோதரிகளின் வெற்றி, அந்த பகுதியில் உள்ள எண்ணற்ற மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் சரியான வழிகாட்டுதலுடன், எவரும் தடைகளைத் தாண்டி தங்கள் இலக்குகளை அடைய முடியும் என்பதை இந்த சிறுமிகளின் வெற்றி நிரூபித்துள்ளது. அவர்களின் சாதனைகள் பாராட்டுதலுக்குரியது. காஷ்மீர் இளைஞர்களுக்குள் இருக்கும் திறன்களுக்கான சான்றாக சிறுமிகளின் வெற்றி எப்போதும் நிற்கும்.