கணவன் மனைவி கட்டுப்பாட்டில் இந்திய விலங்குகள் நலவாரியம் - பீட்டா தலைவருக்கு அதில் பதவி.... அதிர்ச்சி தகவல்

Asianet News Tamil  
Published : Jan 17, 2017, 03:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
 கணவன் மனைவி கட்டுப்பாட்டில் இந்திய விலங்குகள் நலவாரியம் - பீட்டா தலைவருக்கு அதில் பதவி....  அதிர்ச்சி தகவல்

சுருக்கம்

இந்திய விலங்குகள் நலவாரியம் கணவன் மனைவி இருவர் கட்டுப்பாட்டில் உள்ளது இருவரும் பீட்டா ஆதரவாளர்கள், இதில் அமெரிக்க வாழ் பீட்டா அமைப்பின் தலைவருக்கு விலங்குகள் நல வாரியத்தில் பதவி அளித்திருக்கும் விவகாரமும் வெளியாகி உள்ளது.

தமிழர்களின் பாரம்பரியம், அடையாளமான ஜல்லிக்கட்டு விளையாட்டு கடந்த 3 ஆண்டுகளாக நடத்த முடியாமல் உச்சநீதிமன்றத்தின் தடையால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தடைக்கு முக்கியக்காரணம், இந்திய விலங்குகள் நலவாரியம், மற்றும் ‘பீட்டா’ என்ற அமெரிக்க சார்பு அமைப்பு . இவர்கள் போட்ட வழக்கால் தான், உச்சநீதிமன்றம் இந்த அளவுக்கு வீரியத்துடன் செயல்பட்டு ஜல்லிக்கட்டை நடத்த விடாமல், தடை விதித்துள்ளது.

 மத்தியஅரசின் மேற்பார்வையில், ஆலோசனையில் செயல்பட வேண்டிய சுயாட்சி பெற்ற இந்திய விலங்குகள் நல வாரியம் , தனியார் தொண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் எதையும் சுதந்திரமாக செய்யமுடியாமல் தமிழர்களின் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டு அமெரிக்க நிறுவனத்தால் கட்டிப்போடப்பட்டுள்ளது.

 இந்திய விலங்குகள் நலவாரியத்தை அதன் அதிகாரத்தில் இருக்கக் கூடிய ஒரு குடும்பம் தான் இயக்கிக் கொண்டு இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? அதில், சட்டவிரோதமாக  பீட்டா தலைமை நிர்வாகிக்கு  உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறதா என்றால் நம்பமுடிகிறதா?

ஆம்,  சின்னி கிருஷ்ணா, அவரின் மனைவி நந்திதா கிருஷ்ணாவின் ஆகியோரும், அவர்களுக்கு வேண்டியவர்களால் தான் இந்திய விலங்குகள் நல வாரியம் இயக்கப்படுகிறது.

 இதில் சின்னி கிருஷ்ணா இந்திய விலங்குகள் நல வாரியத்தின்(ஏ.டபிள்யு.பி.ஐ.) துணைத் தலைவராக இருக்கிறார். இவர்தான் புளூ கிராஸ் அமைப்பின் தலைவராக இருக்கிறார்.

இவரின் மனைவி நந்திதா கிருஷ்ணா. இவர் புளு கிராஸ் அமைப்பின் துணைத் தலைவராக இருக்கிறார்.  மேலும், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் யுமெயின் விலங்குகளுக்கான தொண்டு நிறுவனத்தின் ஒரு முக்கிய உறுப்பினராகவும், நந்திதா இருக்கிறார்.

 இவர்களின் குடும்பமும் இவர்களைச் சார்ந்தவர்கள் தான் நாட்டில் உள்ள அனைத்து தனியார் விலங்குகள் நல அமைப்பிலும் இருக்கிறார்கள். விலங்குகள் நல வாரியத்தில் உறுப்பினர்களையும்  இவர்கள்தான் தங்கள் ஆதிக்கத்தின் அடிப்படையில் நியமிக்கிறார்கள்.

 புரியவில்லையா… இந்திய விலங்குகள் நலவாரியம் என்பது மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு சுயாட்சி பெற்ற அமைப்பு. இருந்தாலும், மத்தியஅரசின் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கேட்டு அதன்படி நடக்க வேண்டியது இந்த ஏ.டபிள்யு.பி.ஐ. அமைப்பின் முக்கிய கடமையாகும். ஆனால், இங்கு நடப்பதோ அனைத்தும் தலைகீழ்.

 இந்திய விலங்குகள் நல வாரியத்தின் துணைத்தலைவராக இருக்கும் சின்னி கிருஷ்ணா, தனக்கு தேவையான தனியார் விலங்குகள் நல அமைப்புக்கு மட்டும் அங்கீகாரம் அளித்து அதை அங்கீகாரம் பெற்ற அமைப்பாக மாற்றிவிடுவார். மற்ற அமைப்புகள் உண்மையில் விலங்குகள் நல அமைப்பாக இருந்தாலும் அவர்களை அங்கீகாரம் பெற்ற அமைப்பாக கருதமாட்டார்கள்.

 சின்னி கிருஷ்ணா தான் அங்கீகாரம் அளித்த விலங்குகள் நல அமைப்பில், தனக்கு தேவையான, கட்டுப்பட்ட இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினரை அந்த விலங்குகள் அமைப்பின் இயக்குநராக அமர்த்திவிடுவார். இந்த தொண்டு நிறுவனங்கள் தான் இப்போது இந்திய விலங்குகள் நல அமைப்பை கட்டுப்படுத்தி நடத்தி வருகின்றன.

சுருங்கச்சொன்னால்,  பீட்டா, எச்.எஸ்.ஐ., பி.எப்.ஏ. ஆகிய தனியார் தொண்டு நிறுவனங்கள் தான் இன்றைய சூழலில் இந்திய விலங்குகள் நல வாரியத்தை கட்டுப்படுத்தி வருகின்றன.

 மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய இந்திய விலங்குகள் நல வாரியம், இன்று தான்தோன்றித்தனமாக நடந்து வருகிறது. மத்திய அரசு கூறும் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கேட்காமல், ‘நீ என்ன கூறுவது’, ‘நான் என்ன கேட்பது’ என்ற ரீதியில் இந்திய  விலங்குகள் நல வாரியம் செயல்படுகிறது.

 இவை அனைத்துக்கும் முக்கியக் காரணமாக இருப்பது இந்த பீட்டா, பி.எப்.ஏ., எச்.எஸ்.ஏ. போன்ற தனியார் தொண்டு நிறுவனங்கள். இந்த தனியார் தொண்டு நிறுவனங்கள் என்பவை, பன்னாட்டு நிறுவனங்களின் அப்பட்டமான கைக்கூலிகள், அந்த பெரு நிறுவனங்களின் நிதி உதவியில் செயல்படும் அமைப்புகளாகும்.

 ஆக, பன்னாட்டு நிதியுதவியின் மூலம், அவர்களின் விரல் அசைவுக்கு ஏற்றபடி, ஒட்டுமொத்தமாக பார்த்தால், இந்திய விலங்குகள் நல வாரியத்தை மறைமுக இயக்குவது பன்னாட்டு நிறுவனங்கள் தான்.

 அதனால், தான் ஜல்லிகட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாதிடுவதற்காக, புகழ்பெற்ற 11 மூத்த வழக்கறிஞர்கள், 49துணை வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 80 வழக்கறிஞர்களை நியமித்து, பீட்டா அமைப்பு வழக்கை நடத்தி வருகிறது.

நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் வழக்கறிஞர்களுக்கு கட்டணம் கொடுத்து பீட்டா, உள்ளிட்ட தனியார் தொண்டு நிறுவனங்கள் வழக்கை நடத்தி வருகின்றன. ஆனால், இந்த வழக்கை நடத்துவதற்கும், இந்திய விலங்குகள் நலவாரியம் சார்பில் செலவு செய்யப்படவில்லை.

இந்த வழக்குக்காக பீட்டா போன்ற தனியார் தொண்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன. அவற்றை தட்டிக்கேட்க முடியாமல் மவுனமாக மத்திய அரசு இருக்கிறது.

இந்திய  விலங்குகள் நல வாரியம் வெளிநாட்டு நிறுவனங்களால் மறைமுக இயக்கப்படுவதற்கு மிகச்சிறந்த உதாரணம் பீட்டா அமைப்பின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி(சி.இ.ஓ.) பூர்வா ஜோஷிபுரா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதுதான்.  இவர் ஒரு அமெரிக்க பிரஜை, குடியுரிமை பெற்றவர்.

 மத்திய அரசால், கட்டுப்படுத்தப்படும், நிர்வகிக்கப்படும் இந்திய விலங்குகள் நல வாரியத்தில் வாரிய உறுப்பினராக அமெரிக்காவைச் சேர்ந்த, அதிலும் பீட்டா அமைப்பின் இந்திய தலைவரான பூர்வா ஜோஷிபுரா உள்ளார்.

இந்திய அரசால் நடத்தப்படும், நிர்வகிக்கப்படும் ஒரு சுயாட்சி பெற்ற வாரியத்தில் அமெரிக்கர் எப்படி இடம் பிடிக்க முடியும்? இந்திய அரசு அமைப்பில் அமெரிக்க பிரஜை ஒருவருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது எப்படி?. இந்த கேள்விகளுக்கு இந்திய விலங்குகள் நலவாரியம் பதில் அளிக்குமா?

 இதில் இருந்தே தெரிந்து கொள்ள வேண்டும், இந்திய விலங்குகள் நலவாரியம் வெளிநாட்டு நிறுவனங்களால் ஆட்டி வைக்கப்படும் கைப்பாவையாக மாறிவிட்டது...

 இதற்கு என்னதான் தீர்வு? நமது அரசியல் கட்சிகள் கோரிக்கை வைப்பது போல் இந்திய விலங்குகள் நலவாரியத்தை கலைப்பது தான் .  

PREV
click me!

Recommended Stories

Bengaluru Traffic Alert: பெங்களூரு போறீங்களா? அக்டோபர் முதல் ஜனவரி வரை டிராஃபிக் இன்னும் மோசமாகும்.. காரணம் இதுதான்
Smartphone EMI : EMI கட்டலேன்னா போன் வேலை செய்யாதா? ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?