ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதி.. டிரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா இந்தியா..? மனிதாபிமான அடிப்படையில் உதவியா..?

By vinoth kumarFirst Published Apr 7, 2020, 11:48 AM IST
Highlights

எங்களுக்கான மருந்தை அனுமதித்தால் நன்றாக இருக்கும் என மோடியிடம் கூறியிருந்தேன். அவர் எனது கோரிக்கையை நிராகரிக்கவில்லை. அமெரிக்காவுடனான இந்திய உறவு சிறப்பாகவே உள்ளது. ஒருவேளை அவர் அனுமதிக்கவில்லை என்றாலும் பராவாயில்லை. ஆனால், அதற்கான பதிலடி இருக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

கொரோனா சிகிச்சைக்கு, ஹைட்ராக்சிகுளோரோகுயின் எனப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியாவுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காகொரோனா வைரசால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அங்கு 3,00,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால், செய்வது அறியாமல் அமெரிக்கா நாடு மற்ற நாடுகளிடம் மண்டியிட்டு வருகிறது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயிர்காக்கும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் அங்குதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மற்ற நாடுகளை அமெரிக்கா நம்பியுள்ளது. கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயி்ர்காக்கும் மருந்தாக மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைக்குப்பின், இந்த மாத்திரைகளை ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை செய்ததது.

ஆனால், இந்தியாவிடம் மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா ஆர்டர் செய்திருந்தது. மத்திய அரசின் தடையால் அந்த மாத்திரைகள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் பிரதமர் மோடியிடம் தடையை விலக்கும்படி அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடியும் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.

இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய டிரம்ப், “எங்களுக்கான மருந்தை அனுமதித்தால் நன்றாக இருக்கும் என மோடியிடம் கூறியிருந்தேன். அவர் எனது கோரிக்கையை நிராகரிக்கவில்லை. அமெரிக்காவுடனான இந்திய உறவு சிறப்பாகவே உள்ளது. ஒருவேளை அவர் அனுமதிக்கவில்லை என்றாலும் பராவாயில்லை. ஆனால், அதற்கான பதிலடி இருக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

இந்நிலையில், டிரம்ப் மறைமுக எச்சரிக்கையை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வருகிறோம். இந்த விவகாரத்தில் யூகத்தை கிளப்பவும், அரசியலாக்குவதையும் அனுமதிக்க முடியாது. கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழ்நிலையில், சர்வதேச நாடுகள் வலிமையான ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையை வழங்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. 

click me!