தப்லீக் மாநாட்டிற்கு அனுமதி அளித்தது யார்..? சரமாரியாக கேள்வி எழுப்பிய சரத் பவார்..!

By Manikandan S R SFirst Published Apr 7, 2020, 8:37 AM IST
Highlights

நிலைமையின் தீவிரத்தை உணராமல் டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யாா்? என்று கேள்வி எழுப்பி இருக்கும் சரத் பவார் இந்த பிரச்னையை வைத்து குறிப்பிட்ட மதத்தை வேண்டுமென்றே குறை கூற வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் இருக்கும் நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் மாதம் தப்லீக்  ஜமாத் என்கிற இஸ்லாமிய அமைப்பு இஸ்லாமிய மதகுருக்கள் பங்கேற்ற மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இதனிடையே தப்லீக் ஜமாத் நடத்திய மாநாட்டில் பங்கேற்றவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. இதனால் அம்மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அரசு  கூறியுள்ளது. அவர்களில் பலரை கண்டுபிடித்து மருத்துவ பரிசோதனை செய்து தனிமை சிகிச்சையில் அரசு வைத்திருக்கிறது. பலர் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவர்களை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக தேடி வருகின்றன.

இந்த நிலையில் மாநாடு நடத்த யார் அனுமதி அளித்து என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேள்வி எழுப்பி இருக்கிறார். சமூக வலைதளமான முகநூல் மூலமாக மக்களிடம் உரையாடிய அவர்,  மகாராஷ்டிர மாநிலத்தில் இதுபோன்ற மாநாடு நடத்த அனுமதி கோரப்பட்டதாகவும் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதி மறுக்கப்பட்டதாக கூறியுள்ளார். அனுமதியை மீறி மாநாடு நடத்தும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அமைப்பின் அமைப்பாளா்களுக்கு மகாராஷ்டிர போலீஸாா் எச்சரிக்கை செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இந்தநிலையில் நிலைமையின் தீவிரத்தை உணராமல் டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யாா்? என்று கேள்வி எழுப்பி இருக்கும் சரத் பவார் இந்த பிரச்னையை வைத்து குறிப்பிட்ட மதத்தை வேண்டுமென்றே குறை கூற வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

click me!