
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்ட பலர் தொடர்புடைய ரூ.900 கோடி மதிப்பிலான மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் விசாரணையை 9 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
லாலுபிரசாத் மீதான வழக்குகளை கைவிடக் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவை ஏற்று இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, லாலுபிரசாத் யாதவ், ஜகந்நாத் மிஸ்ரா, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சாஜல் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் இனி விசாரணையை எதிர்நோக்க உள்ளனர்.
பீகார் மாநிலத்தில் 1990-97-ல் லாலுபிரசாத் யாதவ் முதல்வராக இருந்த போது மாட்டுத்தீவனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.9000 கோடி ஊழல் செய்ததாக லாலுபிரசாத் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ தரப்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ல் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் ஒரு வழக்கில் மட்டும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து லாலு பிரசாத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சிபிஐ தரப்பில் லாலுவுக்கு எதிரான சதி குற்றச்சாட்டை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கைவிட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தது. இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்ச நீதி மன்றம் இன்று வழங்கியது.
ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் லாலு மீதான வழக்குகளை கைவிட உத்தரவிட்டதை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்தது. சட்டத்தின் கொள்கையை மறந்து உயர்நீதிமன்றம் செயல்பட்டுள்ளது,
மேலும், இந்த வழக்கில் லாலு மீதான மேல்முறையீட்டு மனுவை நீண்ட காலம் கழித்து சி.பி.ஐ. ஏன் தாக்கல் செய்தது எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து லாலுபிரசாத் உள்ளிட்டோர் மீது மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தனித்தனியாக விசாரணை நடத்தி 9 மாதங்களில் முடிக்க வேண்டும் என சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டது.
ஏற்கனவே மாட்டுத்தீவன வழக்கில் ஒரு பிரிவில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, எம்.பி. பதவியை மன்மோகன் சிங் பிரதமாராக இருக்கும் போது லாலு பிரசாத் ராஜினாமா செய்தார்.
மேலும், 6ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தகுதியும் இழந்தார். இந்நிலையில், இந்த வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி என விசாரணையின் முடிவில் அறிவிக்கப்பட்டால், லாலுவின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனத்துக்கு செல்லும்.