
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால்கூட நல்ல குடும்பத்தில் பிறந்த, சுயமரியாதை கொண்ட பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்லமாட்டார்கள் என கருத்து தெரிவித்த திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோரை கொண்ட அமர்வு, அதனை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் அரசியல் சாசன அமர்வின் பரிசீலனைக்கு சில அறிவுரைகளையும் நீதிபதிகள் முன்வைத்தனர்.
இந்நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்து கருத்து தெரிவித்த, திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன்,
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது என்பது பாரம்பரியத்துடன், பாதுகாப்பும் சார்ந்த பிரச்சினை என்றார்.
மலையில் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது மிகவும் சவாலானது. இதனால்தான் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை நாங்கள் அனுமதிக்கவில்லை என்று கூறினார்.
பாதுகாப்பும், சடங்குகளும் சம அளவில் முக்கியமானது என்றும் இவற்றை நாம் ஒன்றாகவே பார்க்க வேண்டும் என்று கூறிய கோபாலகிருஷ்ணன், இந்த மலைக்கோவிலை சுற்றுலா தலமாக மாற்ற முடியாது என்றார்.
இதைத் தொடர்ந்து அவர் கூறிய கருத்துதான் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கினால்கூட நல்ல குடும்பத்தில் பிறந்த, சுயமரியாதை கொண்ட பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்லமாட்டார்கள் என தெரிவித்தார்.
கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கும் இந்த கருத்துக்கு மாநில தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோபாலகிருஷ்ணனின் இந்த கருத்து பெண்களை அவமதிக்கும் செயல் என்று கூறியுள்ள அவர், இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதே போன்று கேரளாவில் உள்ள பல பெண்கள் அமைப்பினரும் கோபாலகிருஷ்ணணின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.