அக்னி வீரர்களாக அதிகளவு தேர்வாகும் குஜராத் பழங்குடியின இளைஞர்கள்!

By Manikanda Prabu  |  First Published May 31, 2024, 8:28 PM IST

குஜராத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் அக்னி வீரர்களாகத் தேர்வாவது அதிகரித்துள்ளது.


குஜராத்தில் உள்ள பழங்குடியின இளைஞர்கள் அக்னி வீரர்களாக இந்திய ராணுவத்தில் சேர்கின்றனர். இதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம், குஜராத் அரசின் பழங்குடியினர் நலத் துறையுடன்  இணைந்து, 2023ஆம் ஆண்டில் ஒரு முன்முயற்சியைத் தொடங்கியது.

இதன் பலனாக குஜராத்தைச் சேர்ந்த பழங்குடியினர் அக்னி வீரர்களாகத் தேர்வாவது அதிகரித்துள்ளது. தேர்வு எழுதிய 102 பேரில் 76 பேர், முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். இவர்கள் ராணுவத்தில் சேர அடுத்த இரண்டு கட்டங்களான உடல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளில் பங்கேற்க உள்ளனர்.

Latest Videos

undefined

இந்த சிறப்பு முன்முயற்சியில் குஜராத்தின் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த 150 இளைஞர்களுக்கு 75 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்றவர்களுக்கு உணவு மற்றும் உறைவிட வசதிகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு குஜராத் அரசின் பழங்குடியினர் நலத்துறை நிதியுதவி அளித்து முழுமையாக செயல்படுத்தியது.

இதற்கு 6,000 பேர் விண்ணப்பித்த நிலையில், பயிற்சிக்கு 150 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பயிற்சியாளர்கள் வழிகாட்டுதலின் கீழ் வாரத்திற்கு ஆறு நாள் அடிப்படையில் 75 நாட்கள் கடுமையான பயிற்சி பெற்றனர். இந்த முயற்சி குஜராத்தின் பழங்குடி இளைஞர்களை மேம்படுத்துவதற்கும், இந்திய ராணுவத்தில் அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதற்கும் வகை செய்துள்ளது. 150 பழங்குடியின இளைஞர்களுக்கு அடுத்த தொகுப்புப் பயிற்சியை 2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்  தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Lok Sabha election 2024: நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு!

குஜராத் மாநில அரசின் பழங்குடியினர் நலத்துறையுடனான இந்த  ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று  தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பிமல் தெரிவித்தார். இந்த முயற்சி ராணுவத்தில் சேர வேண்டும் என்ற  குஜராத் பழங்குடி இளைஞர்களின்  கனவுகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி, பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது என்று அவர் கூறினார்.

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கு அக்னிபத் எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்றுவார்கள். மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிராக கடுமையான போராட்டங்களும் நடைபெற்ற என்பது குறிப்பிடத்தக்கது.

click me!