
உத்தரபிரதேச ரயில் விபத்திற்கு,தண்டவாளங்களை முறையாக பராமரிக்காததுதான் காரணம் என ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம், பாட்னாவிலிருந்து இந்தூர் நோக்கி விரைவு ரயில் ஒன்று,இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, கான்பூர் அருகே சென்று கொண்டிருந்தபொழுது திடீரென்று 14 பெட்டிகள் தடம்புரண்டு அந்த ரயில் விபத்திற்குள்ளானது.
இந்த கோர விபத்தில்,இதுவரை 100 பேர் பலியாகி உள்ளனர். மேலும், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையும், போலீசாரும் தீவீரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் இந்தியா முழுதும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
ரயிலில் பயணம் செய்த பயணிகள் சிலர் இதுபற்றி கூறும்பொழுது, ரயில் பெட்டிகள் மேலே பறப்பதை போல உணர்ந்தோம்.சில நொடிகளில், இந்த துயரம் நடந்துவிட்டது. தண்டவாளங்கள் முறையாக பராமரிக்கப்படாததுதான் இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் எனவும் குற்றம் சாட்டினர். மேலும், ரயில்வே அதிகாரிகள் முறையாக பதிலளிக்கவில்லை என பயணிகளின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்.