
உத்தரப்பிரதேசம், கான்பூர் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 14பெட்டிகள்
இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 65 பேர்பலியானார்கள். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நோக்கி இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. இந்த ரெயில் கான்பூர் அருகே தேகாத் மாவட்டம் புக்ராயன் பகுதியில் இன்று அதிகாலை வந்த போது, அந்தரெயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. இதில் 14 பெட்டிகளும் கடுமையாக சேதமடைந்தன.
விபத்து ஏற்பட்டதும் அப்பகுதியில் மிகப்பெரிய சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மேலே ஏறிக்கிடந்ததால்,பயணிகள் வெளியே வரமுடியாமல் ரத்தக்காயத்தோடு அலறித்துடித்தனர். மேலும் அதிகாலை நேரம் என்பதால், பலரும் தூங்கிக்கொண்டு இருந்ததால், தூக்கக்கலக்கத்தில் விபத்து நடந்தஉடன் அதை உணரமுடியாமல் அலறினர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்தில் இருந்து இதுவரை 65 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்து பெரிதாக இருப்பதால், உயிர்பலி மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலான நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. கான்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தேகாத் மருத்துவமனையில் காயம் அடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரெயில்வே செய்தித் தொடர்பாளர் அனில் சக்சேனா கூறுகையில்,
விபத்து நடந்த பகுதிக்கு மூத்த அதிகாரிகளும், மீட்புப்குழுவினரும் அனுப்பப்பட்டுள்ளனர். நாங்கள் மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். எஸ்2 பெட்டி கடுமையாக சேதமடைந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் 4 ஏ.சி. பெட்டிகளும் சேதமடைந்துள்ளன என்றார்.
விபத்து நடந்த பகுதியில் மீட்புப்பணிகளை தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளுமாறு மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் என்பது இன்னும் தெரியவில்லை. இது குறித்து முழுமையான விசாரணைக்கு மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்தால் பயணத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முறையான பஸ் வசதிகளை ரெயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
இந்த விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.