
மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள ரூபாய் அச்சடிக்கும் அரசு அச்சகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் 2 மாத சம்பளத்தை ரொக்கமாக கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமர் மோடியின் ரூபாய் செல்லாத அறிவிப்பு, நாட்டுக்கே ரூபாய் ‘சப்ளை’ செய்யும் செய்யும் அச்சகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் ‘ஆப்பு’ வைத்துவிட்டது.
நாச்சிக்கில் ‘கரன்சி நோட் பிரஸ்’(சி.என்.பி.), ‘இந்தியா செக்யூரிட்டி பிரஸ்’(ஐ.எஸ்.பி.) ஆகிய மத்திய அரசுக்கு சொந்தமாக அச்சகங்கள் உள்ளன. இதில் ஐ.எஸ்.பி. என்பது, பாஸ்போர்ட், விசா, பத்திர பதிவுத்தாள், நீதிமன்ற ஸ்டாப் உள்ளிட்டவைகளை அச்சிடுகிறது. சி.என்.பி. நிறுவனம் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வருகிறது.
கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடி ரூ.500, ரூ1000 நோட்டு செல்லாத அறிவிப்பால், நாட்டில் உள்ள சாமானிய மக்கள் மட்டுமின்றி, ரூபாய் நோட்டுக்குள்ளேயே அதிகமாகப் புழங்கிவரும் இந்த தொழிலாளர்களையும் பாதித்துள்ளது.
வழக்கமாக இவர்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பணியாற்றுவார்கள். ஆனால், பிரதமர் மோடியின் அறிவிப்புக்குப் பின் கூடுதல் நேரம் உழைக்க வற்புறுத்தப்படுகிறார்கள். இதனால், வங்கி, தபால்நிலையத்தின் வாசலில் நின்று, செல்லாத ரூபாய்களை மாற்ற இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆதலால், தங்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத சம்பளத்தை ரொக்கப்பணமாக வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தொழிலாளர்கள் அமைப்பின் தலைவர்கள் ராம்பாபு ஜக்தாப், அசோக் கெய்தானி ஆகியோர் தங்களின் கோரிக்கையை சி.என்.பி. மற்றும் ஐ.எஸ்.பி. அச்சகங்களின் மேலாளர்களிடம் நேற்று அளித்தனர். தங்களின் 2 மாத சம்பளத்தை வங்கிக்கணக்கில் ஆன்-லைனில் செலுத்தாமல், ரொக்கமாக கொடுக்க கோரிக்ைக விடுத்துள்ளனர்.