
கொச்சி மெட்ரோ ரெயிலுக்காக இரவு-பகல் பாராது கடுமையாக உழைத்த வடமாநிலத் தொழிலாளர்கள் 800 பேருக்கு பாரம்பரிய ‘சத்யா’ விருந்து பரிமாறி கேரள அரசு நன்றி செலுத்தியது.
மெட்ரோ ரெயில் சேவை
கொச்சி மெட்ரோ ரெயில் பணிகள் முடிந்துள்ள நிலையில் நாளை(17-ந்தேதி),ஆலுவா நகரில் இருந்து பழரிவாட்டம் நகர் வரை 17 கி.மீ. ரெயில் பயணத்தை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் பிரதமர் மோடியும் பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர்கள்
இந்நிலையில், கொச்சி மெட்ரோ ரெயில் பணியில் ஏறக்குறைய 800-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் இரவு-பகல் பாராது அயராது உழைத்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கேரள பாரம்பரிய ‘சத்யா’ விருந்து அளிக்கப்பட்டது.
9வகை காய்கறி
கொச்சியில் உள்ள கலாமந்திர் அரங்கில் இதற்காக சிறப்பு விருந்து கேரள அரசு சார்பில் தயாரிக்கப்பட்டு இருந்தது. தலைவாழை இலையுடன், 9 வகையான காய்கறிகள், சாதம், நெய், 2 வகை பாயாசம், பழம், அப்பளம் என அசத்தலாக சத்யாவிருந்து பரிமாறப்பட்டது.
நடனம், இசை
கொச்சி மெட்ரோ ரெயில் பணியில் பணியாற்றிய தொழிலாளர்கள் மிகுந்தமரியாதையுடன் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு முதலில் சிறிய அளவிலான இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பெரிய எந்திரங்களையும், சம்பட்டி, கடப்பாரை, சிமென்ட், கற்கள் என பார்த்துப் பழகிப்போன தொழிலாளர்கள் இசைநிகழ்ச்சியையும், விருந்தையும் பார்த்து பிரமித்து, உடன் நடனமாடி மகிழ்ந்தனர். பின்னர் விருந்தில் அமர்ந்து செல்பி எடுத்துக்கொண்டனர்.
ருசித்து சாப்பிட்டனர்
இந்த விருந்தில் கலந்து கொண்ட தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் கேரளசத்யா விருந்தை முதன்முதலில் சாப்பிட்டதால், நன்றாக ருசித்து சாப்பிட்டனர். சிலருக்கோ ‘சத்யா’ விருந்தை எப்படி சாப்பிடுவது என்றும் தெரியவில்லை, வாழை இலையில் வைக்கப்பட்ட காய்களை சாப்பிடாமல் குறிப்பிட்ட சில உணவுகளை மட்டும் கேட்டு வாங்கி உண்டனர்.
முதல் விருந்து
இது குறித்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கோகுல்ராம் கூறுகையில் “ கேரளாவில் நான் சாப்பிடும் முதல் சத்யா விருந்து இதுவாகும். கடந்த 9 மாதங்களுக்கு மேலாக இங்கு பணியாற்றினேன். இந்த விருந்து மிகவும் பிடித்து இருந்தது’’ என்றார்.
அரசின் நன்றிக்கடன்
கொச்சி மெட்ரோ ரெயிலின் மேலாளர் எலியாஸ் ஜார்ஜ் கூறுகையில், “ மெட்ரோரெயில் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு விருந்து அளிக்க அரசிடம் அனுமதி கோரினோம். தொழிலாளர்களுக்கு நன்றி செலுத்த அரசும் ஒப்புக்கொண்டதையடுத்து, பிரமாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்தோம்’’ என்றார்.