
பீகாரில் மது விலக்கு அமல்படுத்திய பிறகு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவு
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்கு அப்பால் உள்ள மதுக்கடைகளை மூடும்படி சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை இருந்த மதுக்கடைகள் அகற்றப்பட்டன. இதனயைடுத்து சுற்றுலா தொழில் பாதிக்கப்படும் என சில ஆய்வாளர்கள் கூறி வந்தனர்.
அதிகரிப்பு
இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் , மது விலக்கு அமலாக்கப்பட்ட பிறகு பீகாரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
அவர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது-
68 சதவீதம் உயர்வு
பீகாரில் மதுவிற்பனை அமலில் இருந்தபோது கடந்த 2015-ல் ஒரு கோடியே 69 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். ஆனால் மது விலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு 2016-ல் பீகாருக்கு வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 கோடியே 85 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 68 சதவீத அதிகரிப்பாகும்.
அதேபோல வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கடந்த 2015-ல் 9 லட்சத்து 23 ஆயிரம் பேர் வந்தனர். ஆனால் 2016-ல் 10 லட்சத்து 10 ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் பீகாருக்கு வருகை தந்துள்ளனர். இது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் 9 சதவீத வளர்ச்சி ஆகும்.
ரூபாய் நோட்டு தடை
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 2016-ல் பீகார் மாநில வருவாய் ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. ஆனால் இதற்கு மது விலக்கு காரணம் இல்லை. மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடை அறிவிக்கப்பட்டதாலும் பிற காரணங்களாலும் இது ஏற்பட்டுள்ளது
மதுவால் இழப்பு ஏற்பட்டதை விட பொதுமக்கள் ஆடைகள் ,உணவுப்பொருட்கள் மற்றும் வீட்டுச் சாமான்கள் வாங்கியதால் அரசுக்கு 2 மடங்கு வருவாய் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கேரளா ,மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று மதுவால் ஏற்படும் தீமை குறித்தும், மது விலக்கின் அவசியம் குறித்தும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.