டெல்லி அரசின் இந்த முயற்சிகள் எல்லாம் மீம் கன்டண்டுகளாக ஆனது மட்டுமே மிச்சம். இந்தப் படங்களைப் போட்டு சமூக ஊடகங்களில் டெல்லி அரசை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
டெல்லி யமுனை ஆற்றில் பொங்கும் நுரைகளை அப்புறப்படுத்த டெல்லி அரசு, நம்மூர் செல்லூர் ராஜூவையே விஞ்சும் அளவுக்கு நடவடிக்கைகள் எடுத்து கேலிக்கு ஆளாகியுள்ளது.
வைகை அணையிலிருந்து தண்ணீர் நீராவி ஆவதைத் தடுக்கும் வகையில் கடந்த 2017-ஆம் ஆண்டில் அணையிலிருந்த தண்ணீரை தெர்மகோல்களை போட்டு பாதுகாக்க முயன்றார் அன்றைய அமைச்சர் செல்லூர் ராஜூ. அறிவியல் ரீதியில் சாத்தியம் என்றாலும், செல்லூர் ராஜூ சமூக ஊடகங்களில் கேலிக்கு ஆளானார். இப்போது வரை அவரை தெர்மகோல் ராஜூ என்று கேலி செய்வோரும் உண்டு. இந்நிலையில் செல்லூர் ராஜூவின் தெர்மகோலுக்கு கடும் போட்டி அளிக்கும் வகையில், டெல்லி யமுனை நதியில் மிதக்கும் நுரையை அகற்ற டெல்லி அரசு விதவிதமான அஸ்திரங்களை கையில் எடுத்துள்ளது.
யமுனை ஆற்றங்கரையோரம் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து ரசாயன கழிவுகள் கலப்பதால், அவ்வப்போது நுரை பொங்கி வழியும். தண்ணீரே தெரியாத அளவுக்கு உருவாகும் இந்த நுரையால் பாதிப்புகளும் தொடர்கதையாகிவிட்டது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சத் பூஜையை இந்த நுரையில் மூழ்கி டெல்லிவாசிகள் கடவுளை வழிபட்டனர். அதுபோன்றவர்களை டெல்லி போலீஸார் விரட்டியடித்தனர். இந்தத் தாக்குதல் டெல்லியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆற்றில் நுரையை அகற்றும் பணியில் டெல்லி அரசு ஈடுபடத்தொடங்கியது.
முதல் கட்டமாக, லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்து நுரை மீது பீய்ச்சி அடித்தனர். இதனால், நுரை சுருங்கும் என்று எதிர்பார்த்தார்கள். இதனால், கரையின் ஓரம் இருந்த நுரையை மட்டுமே கலைக்க முடிந்தது. பின்னர் மோட்டார் படகுகளை நுரைக்குள் ஊடாக இயக்கி, அதன் மூலம் நுரையை கரைக்க முயன்றனர். ஆனால், அதற்கும் பலன் கிடைக்கவில்லை. கரையோரமாக இருந்த நுரை, ஆற்றின் நடுப் பகுதிக்கு வந்ததுதான் மிச்சம். இதனால், கடைசியாக டெல்லி அதிகாரிகள் கையில் எடுத்து உத்திதான் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது. மையப் பகுதிக்கு தள்ளப்பட்ட நுரை மீண்டும் கரைக்கு வராமல் இருப்பதற்காக, ஆற்றின் நடுவில் மூங்கிலாலான தடுப்புகளை நட்டு வாய்ப் பிளக்க வைத்தார்கள்.
டெல்லி அரசின் இந்த முயற்சிகள் எல்லாம் மீம் கன்டண்டுகளாக ஆனது மட்டுமே மிச்சம். இந்தப் படங்களைப் போட்டு சமூக ஊடகங்களில் டெல்லி அரசை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.