
Top 10 Richest States in India: உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெரும்பகுதியை அதன் முதல் 10 பணக்கார மாநிலங்களே காரணமாகக் கொண்டுள்ளன. இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ள மகாராஷ்டிரா, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகியவை நிதி, தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளில் செழித்து வருகின்றன.
டாப் 10 பணக்கார மாநிலங்கள்
உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை பிற முக்கிய பங்களிப்பாளர்களாகும். இந்த மாநிலங்கள் விவசாயம், தொழில், சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட பொருளாதாரத்தை கூட்டாக இயக்கி, நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைக்கின்றன.
தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது?
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிக ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) கொண்டதாக பணக்கார மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளன. 2024-25ம் நிதி ஆண்டில் மகாராஷ்டிராவில் 42 லட்சத்து 67 ஆயிரம் கோடி மதிப்பில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது தேசிய அளவில் ஒப்பிடும்போது 13.30% ஆகும். நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரை 2024-25 ஆண்டில் 31 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஜிடிபி உள்ளது. இதை தேசிய ஜிடிபியுடன் ஒப்பிட்டால் 8.90% ஆகும்.
குஜராத், உ.பி எந்த இடம்?
தமிழ்நாடில் ஆட்டோமொபைல், ஜவுளி, தகவல் தொழில்நுட்ப சேவை ஆகியவை வளர்ச்சி அடைந்ததே ஜிடிபி அதிகரிக்க முக்கிய காரணமாகும். அதிக ஜிடிபி கொண்ட பணக்கார மாநிலங்களில் கர்நாடகா 3வது இடத்திலும், குஜராத் 4வது இடத்திலும், உத்தர பிரதேசம் 5வது இடத்திலும், மேற்கு வங்கம் 6வது இடத்திலும், ராஜஸ்தான் 7வது இடத்திலும், தெலங்கானா 8வது இடத்திலும், ஆந்திர பிரதேசம் 9வது இடத்திலும் மற்றும் மத்திய பிரதேசம் 10வது இடத்திலும் உள்ளன.
அசுர வளர்ச்சி அடையும் தமிழ்நாடு
இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக சென்னை மாறி வருகிறது. இதேபோல் கோவை, மதுரையும் தமிழ்நாட்டின் முக்கிய தொழில்நுட்ப நகரங்களாக மாறி வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு அதிக அளவு மூதலீடுகளை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.