கொரோனா நோயாளியைக் கொல்லச் சொன்ன டாக்டர்; அதிர்ச்சி அளிக்கும் ஆடியோ!

Published : May 30, 2025, 05:02 AM ISTUpdated : May 30, 2025, 05:26 AM IST
Mohalla Doctor

சுருக்கம்

லாத்தூரில் கோவிட் உச்சத்தில் இருந்தபோது, நோயாளியைக் கொல்லுமாறு சக மருத்துவருக்கு மூத்த மருத்துவர் ஒருவர் உத்தரவிட்டதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரைக் காப்பார்கள் என நம்பப்படும் மருத்துவர்களே, யார் வாழ வேண்டும், யார் இறக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டால் என்னவாகும்? மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் இத்தகைய ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2021ஆம் ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது, ஒரு நோயாளியை "கொன்றுவிடு" என்று சக மருத்துவர் ஒருவருக்கு மூத்த மருத்துவர் ஒருவர் அறிவுறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

சர்ச்சையைக் கிளப்பிய ஆடியோ

2021ஆம் ஆண்டு பெருந்தொற்றின்போது, மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. படுக்கைகளுக்கு பற்றாக்குறையாக இருந்தது. இந்தச் சூழலில், உட்கீர் அரசு மருத்துவமனையின் அப்போதைய கூடுதல் மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணராக இருந்த டாக்டர் சஷிகாந்த் தேஷ்பாண்டே மற்றும் கோவிட்-19 பராமரிப்பு மையத்தில் பணியமர்த்தப்பட்ட டாக்டர் சஷிகாந்த் தாங்கே ஆகியோரிடையே நடைபெற்றதாகக் கூறப்படும் உரையாடலின் ஆடியோ கிளிப் ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குணமடைந்த நோயாளி

பாதிக்கப்பட்ட நோயாளி கௌசர் ஃபாத்திமா (53), தயாமி அஜிமோடின் கௌசோடின் என்பவரின் மனைவி, பின்னர் நோயிலிருந்து குணமடைந்துள்ளார். ஆனால், அவர் லாத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது டாக்டர்கள் இடையே நடந்ததாகக் கூறப்படும் உரையாடல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோ கிளிப்பில், டாக்டர் தேஷ்பாண்டே, "யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம், அந்தப் பெண்ணை கொன்றுவிடு" என்று கூறுவது பதிவாகியுள்ளது. இதற்கு, டாக்டர் தாங்கே ஏற்கனவே ஆக்சிஜன் ஆதரவு குறைக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.

இந்த ஆடியோ தொடர்பாக உட்கீர் நகர காவல்துறையில் கௌசோடின் அளித்த புகாரின் பேரில், டாக்டர் தேஷ்பாண்டே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை நோட்டீஸ்

டாக்டர் தாங்கேக்கும் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. "அவர் மாவட்டத்திற்கு வெளியே இருக்கிறார், நாளை வருவார். அதன் பிறகு, அவரது மொபைல் போனைப் பெற்று விசாரிப்போம்," என்று ஆய்வாளர் திலீப் காடே பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

முதல் தகவல் அறிக்கையின்படி, புகார்தாரர் 2021ஆம் ஆண்டில், பெருந்தொற்றின் போது, தனது மனைவி கௌசர் ஃபாத்திமா (அப்போது 41 வயது) கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அவர் 2021 ஏப்ரல் 15 அன்று உட்கீர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். நந்தேட் சாலையில் உள்ள கண் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஒரு மையத்தில் கோவிட்-19 சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த மருத்துவமனையால் டாக்டர் தாங்கே கோவிட்-19 நோயாளிகளின் சிகிச்சையை மேற்பார்வையிட்டு வந்தார்.

மருத்துவர்கள் உரையாடல்

அந்தப் பெண் 10 நாட்கள் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் அனுமதிக்கப்பட்ட ஏழாவது நாளில், அவரது கணவர் டாக்டர் தாங்கே சாப்பிடும்போது அவர் அருகில் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில், டாக்டர் தாங்கேக்கு டாக்டர் தேஷ்பாண்டேவிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, அவர் போனை ஸ்பீக்கரில் வைத்து மருத்துவமனை விஷயங்கள் குறித்து உரையாடலைத் தொடர்ந்தார்.

அந்த அழைப்பின் போது, டாக்டர் தேஷ்பாண்டே படுக்கை வசதி குறித்து விசாரித்துள்ளார். டாக்டர் தாங்கே படுக்கைகள் காலியாக இல்லை என்று தெரிவித்தபோது, "தயாமி நோயாளியைக் கொன்றுவிடு. இத்தகைய நபர்களுடன் பழகிவிட்டாய்," என்று டாக்டர் தேஷ்பாண்டே கூறுவதைத் தான் தெளிவாகக் கேட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த உரையாடலின்போது சாதி ரீதியான வசைச்சொல்லையும் டாக்டர் தேஷ்பாண்டே பயன்படுத்தியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. டாக்டரின் பேச்சைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்தாலும், தனது மனைவி இன்னும் சிகிச்சையில் இருந்ததால், அந்த நேரத்தில் அமைதியாக இருக்க முடிவுசெய்ததாகவும் பெண்ணின் கணவர் கூறியுள்ளார். அடுத்த சில நாட்களுக்குப் பிறகு, அவரது மனைவி குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!