இந்தியா முழுவதும் 45 லட்சம்... தமிழகத்தில் 4½ லட்சம்! ஸ்டிரைக்கால் சந்திக்கப்போகும் பேரிழப்பு...

By sathish kFirst Published Sep 18, 2019, 2:03 PM IST
Highlights

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான அபராத தொகையை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை ஒருநாள் லாரிகள் ஸ்டிரைக் நடைபெறுகிறது.
 

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான அபராத தொகையை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை ஒருநாள் லாரிகள் ஸ்டிரைக் நடைபெறுகிறது.

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அதிகப்படியான அபராத தொகையை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளதால், இந்த அபராத தொகையை குறைக்க வலியுறுத்தி, லாரி தொழிலை அரசு பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் நாளை ஒரு நாள் லாரிகள் ஸ்டிரைக் நடைபெறவுள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தை அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இப்போராட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடாது.

இதுகுறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது; சாலை விதிமுறை மீறல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். 44-ஏ.இ. வருமான வரி விதியை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். 

இதை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கவுள்ளது. நாளை நடக்கும் ஸ்டிரைக்குக்கு நாங்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளோம். இதனால் இந்தியா முழுவதும் சுமார் 45 லட்சம் லாரிகள் ஓடாது. அதேபோல தமிழகத்தில் 4½ லட்சம் லாரிகளும், சேலம் மாவட்டத்தில் சுமார் 39 ஆயிரம் லாரிகளும் இயங்காது.

இதனால் தமிழகத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்களும், சேலம் மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்களும் தேக்கம் அடையும். எனவே, தமிழகத்தில் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.1 கோடி வருவாய் இழப்பும், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்களுக்கு ரூ. 50 லட்சம் வருவாய் இழப்பும் ஏற்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். அவர் சொல்வதை பார்க்கும்போது இந்தியா முழுக்க பேரிழப்பை சந்திக்க நேரிடும் எனது தெரிகிறது.

click me!