நம்பிக்கை இழக்க வைக்கும் விக்ரம் லேண்டர்.. விடாமல் முயற்சி செய்யும் இஸ்ரோ விஞ்ஞானிகள்!!

By Asianet TamilFirst Published Sep 18, 2019, 1:01 PM IST
Highlights

நிலவின் தென்பகுதியில் சூரிய வெளிச்சம் குறைந்து இருள் சூழ தொடங்கி இருப்பதால் விக்ரம் லேண்டர் உடனான தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஜூலை 22 ம் தேதி நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்பட்டது. திட்டமிட்டபடி சந்திராயன் விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், செப்டம்பர் 7 ம் தேதி நிலவில் தரையிறங்க இருந்தது. இந்த நிலையில் கடைசி நிமிடங்களில் விக்ரம் லேண்டர் உடனான தகவல் தொடர்பு கிடைக்காமல் போனதால் நிலவில் தரையிறங்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது.

இதனிடேயே விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்த இடத்தை ஆர்பிட்டர் கண்டுபிடித்தது. அதை தொடர்ந்து லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். 14 நாட்களுக்கு இந்த முயற்சி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் தற்போது நிலவின் தென்பகுதியில் இருள் சூழத் தொடங்கியிருக்கிறது. இதனால் தற்போது நடைபெற்று வரும் முயற்சிகளில் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 20 ம் தேதிக்கு பிறகு நிலவின் தென்பகுதியில் இரவு நேரம் ஏற்பட்டு விடும் என்பதால், அதற்கு முன்னதாக தொடர்பை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் தகவல் தெரிவித்த இஸ்ரோ, "எங்களுடன் நின்ற அனைத்து மக்களுக்கும் நன்றி. உலகெங்கும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கைகள், கனவுகளால் உந்தப்பட்டு நாம் அடுத்தகட்ட பயணங்களை நோக்கி தொடர்ந்து முன்னேறுவோம்"  என்று பதிவிட்டிருக்கிறது.

click me!