
மண்ணெண்ணெய்க்கான மானியமும் இனி வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆதார் அட்டையின் பயனுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
ஆனாலும் வங்கி கணக்கு தொடங்குவது, கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வது என பல்வேறு தேவைகளுக்கு ஆதார் கார்டு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது.
இதை தொடர்ந்து முதியோர், விதவை, மாற்று திறனாளிகள் ஆகியோருக்கான உதவி தொகை பெறுவதற்கும், ரயில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கும் ஆதார் கட்டாயம் என தெரிவித்தது. மேலும், ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டது.
நாடு முழுதும் காஸ் மானியம், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மண்ணெண்ணெய்க்கான மானியமும் வங்கிக்கணக்கில் செலுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய்க்கான முழு பணத்தை கொடுத்து பொதுமக்கள் வாங்கி கொள்ள வேண்டும். இதற்கான மானியம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு அசாம், மேகாலாயா மற்றும் காஷ்மீர் மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களில் அமலுக்கு வருகிறது மத்திய அரசின் கழிப்பறை கட்ட வழங்கப்படும் ரூ.4 ஆயிரம் மானியம் பெறவும் ஆதார் எண் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.