எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவின் பேரில், நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொண்டது.
இதையடுத்து, பாஜக எம்பி வினோத் குமார் சோங்கர் தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைக் குழு தங்களது விசாரணை அறிக்கையை மக்களவையில் கடந்த 8ஆம் தேதியன்று தாக்கல் செய்தது. அதில், மஹுவா மொய்த்ராவின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நெறிமுறையற்ற நடத்தைக்காக மக்களவை எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்யவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
மிக்ஜாம் புயல்: உடனடி நிவாரணம் வழங்குக - நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்!
நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவின் இந்த விசாரணை அறிக்கையின் பரிந்துரை மக்களவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இந்த நிலையில், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனது அடிப்படை உரிமைகளை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு ஒரு தனிநபருக்கு உரிமை உண்டு என்று பிரிவு 32 கூறுகிறது. எனவே, அப்பிரிவின்படி தனக்கு தீர்வு கோரி உச்ச நீதிமன்றத்தை அவரால் நேரடியாக அணுக முடியும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.