மத்தியப்பிரதேச பாஜக முதல்வர் யார்? இன்று மாலைக்குள் அறிவிப்பு!

By Manikanda Prabu  |  First Published Dec 11, 2023, 1:32 PM IST

மத்தியப்பிரதேச பாஜக முதல்வர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 7ஆம் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், தெலங்கானா, மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸும், மிசோரமில் ஜோரம்  மக்கள் இயக்கமும் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து, தெலங்கானா முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டியும், மிசோரம் முதல்வராக ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமாவும் பதவியேற்றுள்ளனர். ஆனால், மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜக மட்டும் இன்னும் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்திருந்தது. “முதல்வரை அறிவிப்பதில் தாமதம் ஏம்?” எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியது.

Latest Videos

undefined

அதன் தொடர்ச்சியாக, பழங்குடியின தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்னு தியோ சாய் என்பவரை சத்தீஸ்கர் முதல்வராக பாஜக மேலிடம் அறிவித்தது. அம்மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் அவர் உரிமை கோரியுள்ளார்.

இந்த நிலையில், மத்தியப்பிரதேச பாஜக முதல்வர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போபாலில் இன்று நடைபெறவுள்ள பாஜக சட்டமன்றக் கட்சி கூட்டத்தில், மேலிட பார்வையாளர்கள் மூன்று பேர் முன்னிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 163 பாஜக எம்எல்ஏக்கள் மத்தியப்பிரதேச முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என தெரிகிறது.

எதிர்வரவுள்ள மக்களவை தேர்தல் வரை தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகானே முதல்வராக தொடர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முதல்வர் பதவியை பிடிக்க ஏராளமானோர் போட்டி போடுவதையும் நிராகரிக்க முடியாது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தீர்ப்பு: பிரதமர் மோடி புகழாரம்!

அவர்களில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மாநில தேர்தல் மேலாண்மைக் குழுத் தலைவருமான நரேந்திர சிங் தோமர், மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா, மாநில அமைச்சர்கள் கோபால் பார்கவா, ராஜேந்திர சுக்லா ஆகியோர் அடங்குவர். இவர்களில், ஜோதிராதித்ய சிந்தியா, பிரஹலாத் சிங் படேல் ஆகிய இருவருமே, சவுகானை போலவே ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்கள். மற்ற அனைவருமே உயர் வகுப்பை சேர்ந்தவர்கள்.

வைசியர் சமூகத்தை சேர்ந்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா மற்றும் முதல் முறை பழங்குடியினர் எம்.பி.யான சுமர் சிங் சோலங்கி ஆகியோரும் பட்டியலில் உள்ளனர். ஒருவேளை, பெண் ஒருவரை முதல்வர் பதவிக்கு பாஜக மேலிடம் தேர்வு செய்யும் பட்சத்தில், இரண்டு முறை முன்னாள் எம்.பி.யும், முதல் முறை எம்.எல்.ஏ.வுமான ரித்தி பதக் முதல்வராக அறிவிக்கப்படலாம்.

பாஜக ஏற்கனவே சத்தீஸ்கரில் பழங்குடியினத் தலைவரை முதல்வராகத் தேர்ந்தெடுத்துள்ளது. அதேசமயம், மத்தியப்பிரதேச மக்கள் தொகையில் பாதி பேர் ஓபிசிகள். சிவராஜ் சிங் சவுகான், மறைந்த பாபுலால் கவுர் மற்றும் உமாபாரதி உட்பட கடைசி மூன்று முதல்வர்களை ஓபிசி சமூகத்தில் இருந்தே பாஜக தேர்ந்தெடுத்துள்ளது. எனவே, இம்முறையும் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்களையே முதல்வராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.

ஒருவேளை சிவராஜ் சிங் சவுகான் தேர்ந்தெடுக்கப்படா விட்டல், ஜோதிராதித்ய சிந்தியா, பிரஹலாத் சிங் படேல் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதில், பிரஹலாத் சிங் படேல் லோதி சாதியை சேர்ந்தவர். ஜோதிராதித்ய சிந்தியா குர்மி சாதியைச் சேர்ந்தவர். மத்தியப்பிரதேசத்தின் 29 மக்களவை தொகுதிகளிலும், உத்தரப்பிரதேசத்திலும் கணிசமான எண்ணிக்கையில் லோதி சாதியினர் உள்ளதால், பிரஹலாத் சிங் படேலுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மறைந்த கல்யாண் சிங்கும், முன்னாள் மத்தியப்பிரதேச முதல்வர் உமாபாரதியும் லோதி சாதியைச் சேர்ந்தவர்கள்.

click me!