ஜம்மு காஷ்மீரில் அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370ஆவது சட்டப்பிரிவை கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ரத்து செய்த மத்திய பாஜக அரசு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அதன்படி, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்பட்டு வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் கடைசியாக 2014ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, 2019ஆம் ஆண்டில் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை.
undefined
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்த வகையில், மூன்று விதமான தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கினர். மூன்று விதமான தீர்ப்பு வழங்கப்பட்டாலும், ஒரே தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். அதன்படி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பின் ஒருபகுதியாக, ஜம்மு காஷ்மீரில் அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவம் கூடிய விரைவில் மீட்டெடுக்கப்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம் என தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.
நேரடி தேர்தல் என்பது ஜனநாயகத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று என்றும், அதைத் தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது. முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக இந்த வழக்கு விசாரனையின்போது, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தது.
அதேபோல், “பாதுகாப்பு நிலைமை மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் பிற தேர்தல்களை மனதில் கொண்டு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கான சரியான நேரம் என்று தேர்தல் ஆணையம் கருதும்போது தேர்தல் நடத்தப்படும்.” என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்திருந்தார்.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு: 3 விதமான தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்றம்!
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முஃப்தி முகமது சையத் தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. 2016ஆம் ஆண்டில் முஃப்தி முகமது சையத் காலமானதால் கூட்டணியில் குழப்பம் நிலவியது.
இருப்பினும், மெஹபூபா முஃப்தி தலைமையில் மீண்டும் அதே கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக 2018ஆம் ஆண்டில் கூட்டணியில் இருந்து பாஜக விலகியது. இதனால், மெஹபூபா முஃப்தி அரசு கவிழ்ந்தது. அம்மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. இதையடுத்து, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த நிலையில், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிரப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது சட்டப்பிரிவை ரத்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆளும் மத்திய பாஜக அரசு பிரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.