ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தீர்ப்பு: பிரதமர் மோடி புகழாரம்!

Published : Dec 11, 2023, 12:47 PM IST
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தீர்ப்பு: பிரதமர் மோடி புகழாரம்!

சுருக்கம்

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியன்று மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் என்றும், சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த வகையில், மூன்று விதமான தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கினர். மூன்று விதமான தீர்ப்பு வழங்கப்பட்டாலும், ஒரே தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். அதன்படி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

 

 

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. 5 ஆகஸ்ட் 2019 அன்று இந்திய நாடாளுமன்றம் எடுத்த முடிவை அரசியலமைப்பு ரீதியாக இந்த தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது. இது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நம்பிக்கை, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பு. நீதிமன்றம், அதன் ஆழ்ந்த ஞானத்தில், இந்தியர்களாகிய நமது ஒற்றுமையின் சாரத்தை வலுப்படுத்தியுள்ளது.

ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு அசையாதது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன். முன்னேற்றத்தின் பலன்கள் உங்களைச் சென்றடைவது மட்டுமல்லாமல், 370ஆவது பிரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட நமது சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினருக்கும் அதன் பலன்களை வழங்குவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

ஜம்மு காஷ்மீரில் அடுத்தாண்டு செப்.30க்குள் தேர்தல்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இன்றைய தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒளிமயமான எதிர்காலத்திற்கான வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது.” இவ்வாறு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை! பிரதமர் மோடி மகிழ்ச்சி!
திருப்பதியில் ரூ.54 கோடி சால்வை மோசடி! பட்டுக்கு பதில் பாலியஸ்டரை கொடுத்தது அம்பலம்!