
ஆந்திராவில் திருமலை திருப்பதி கோயிலில் ஒரே நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில்
திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்துக்கு வரும் பொதுமக்களுக்கு மலைஅடிவாரம், ரயில் நிலையம் மற்றும் பேருந்துநிலையம் ஆகிய மூன்று இடங்களில் இலவச தரிசனத்துக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 30,000 டோக்கன் வழங்கப்பட்டு தரிசனத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகமான பக்தர்கள் வருகையின் காரணமாக மூன்று நாட்களுக்கு கொடுக்கப்படும் 90,000 டோக்கன்களை ஒரே நாளில் கொடுக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலால் தள்ளு முள்ளு
இதனால் அடுத்த மூன்று நாட்களுக்கு டோக்கன் கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் அறிவித்தது . இதனை அறியாத சிலர் இலவச டோக்கன் பெறுவதற்காக இரவில் இருந்து அந்த டோக்கன் கவுண்டரில் காத்திருந்தனர். இதையடுத்து காலை 6 மணிக்கு டோக்கன் வழங்கியபோது வரிசையில் இருந்த பக்தர்களை தவிர வெளியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் உள்ளே நுழைந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் காயமடைந்தனர்.
விஐபி தரிசனம் ரத்து
இதனிடையே, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதாலும், தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் சனி ,ஞாயிறு என தொடர் விடுமுறை காரணமாக நாளை புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.