Tirupati Temple : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் மார்ச் 18ஆம் தேதி நாளை முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tirupati Darshan Tickets: Online Booking for June : திருமலை திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்படுகிறது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம். ஜூன் மாதத்திற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அதிகாரிகள் நாளை வெளியிடுகின்றனர். அதன்படி மார்ச் 18ஆம் தேதி நாளை காலை 10 மணி முதல் ஜூன் மாதத்திற்காக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் கிடைக்கும். நாளை 18ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் தரிசன டிக்கெட்டுக்கான முன்பதிவு மேற்கொள்ளலாம். அப்படி விண்ணப்பிக்கும் பக்தர்கள் தங்களது மொபைலுக்கு குறுந்தகவல் வந்தவுடன் டிக்கெட்டுக்கான தொகையை செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
நாளை ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படும் நிலையில் அங்கபிரதட்சனத்திற்கான டிக்கெட் ஒதுக்கீடு வரும் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இதே போன்று மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோர் ஏழுமலையான தரிசனம் செய்வதற்கான இலவச டிக்கெட் மார்ச் 23 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது. பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி:
* முதலில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும்.
* பின்னர் முகப்புப் பக்கத்தில் ஆன்லைன் முன்பதிவு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* உங்களிடம் கணக்கு இருந்தால், நீங்கள் நேரடியாக டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். இல்லையெனில், நீங்கள் ஒரு கணக்கை உருவாக்க வேண்டும்.
* கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல் மூலம் நேரடியாக உள்நுழைய வேண்டும்.
* பின்னர் நுழைவு தரிசனம் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* பின்னர் உங்களுக்கு எத்தனை டிக்கெட்டுகள் வேண்டும் மற்றும் தரிசனத்திற்கு செல்லும் நபர்களின் விவரங்களை உள்ளிடவும். நீங்கள் கூடுதல் லட்டுகளையும் தேர்ந்தெடுக்கலாம்.
* அதன் பிறகு, தேதியைத் தேர்ந்தெடுத்து, நேரத்தைத் தேர்ந்தெடுத்து இறுதியாக கட்டண விருப்பத்தை சொடுக்கவும்.
* கிரெடிட், டெபிட் கார்டு அல்லது இணையதளம் மூலம் பணம் செலுத்த வேண்டும். டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தவுடன், அவற்றை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்கலாம்.