
திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு, அது தயாரிக்க பயன்படும் இடுபொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆந்திர அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடுமுழுவதும் ஒரே மறைமுக வரியான சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான ஆயத்தபணிகளில் மத்தியஅரசு தீவிரமாக இறங்கி உள்ளது. ஏறக்குறைய 1200 பொருட்கள், 500 ேசவைகளுக்கான வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டன.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு, அது செய்ய பயன்படும் இடுபொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க தேவஸ்தானம் சார்பில் ஆந்திர மாநில நிதி அமைச்சர் யனமாலா ராமகிருஷ்ணடுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் யனமாலா ராமகிருஷ்ணடு ஐதராபாத்தில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ திருப்தி தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த லட்டு தயாரிக்க பயன்படும் உள்ளீடு பொருட்களான நெய், கடலைமாவு, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, சமையல் எண்ணெய் மற்றும் இதர பிரசாதங்கள் தயாரிக்க பயன்படும் உள்ளீடு பொருட்கள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் தலைவராக இருக்கும் அருண்ஜெட்லியிடம் நான் தெரிவிப்பேன். மேலும், பூஜைப் பொருட்கள், பக்தர்கள் தங்குமிடங்கள், பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தலைமுடி உள்ளிட்டவைகள் தேவஸ்தானத்துக்கு முக்கிய வருவாயாக இருந்து வருகின்றன. இவற்றுக்கும் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை ைவப்போம்.
ஆந்திர அரசு ஏற்கனவே, திருப்தி லட்டு, உள்ளிட்ட பிரசாதங்கள், பக்தர்கள் தங்குமிடங்கள் உள்ளிட்ட தேவஸ்தானம் தொடர்பான பொருட்களுக்கு வாட் வரியில் இருந்து விலக்கு அளித்து இருக்கிறத என்பதையும் தெரிவிப்போம்” எனத் தெரிவித்தார்.
கடந்த 2016-17ம் ஆண்டில் திருப்திதேவஸ்தானதுக்கு பக்தர்களின் காணிக்கையாக வந்த தொகை மட்டும் ரூ.ஆயிரத்து 38 கோடியாகும். 2.68 கோடி பக்தர்கள் திருமலைக்கு வருகை தந்துள்ளனர். 10.46 கோடி லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.