
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 7வது நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தேரோட்டம் இன்று நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
6வது நாளான நேற்று முன்தினம் காலை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா வந்தார். மாலை 5 மணிக்கு தங்க தேரோட்டம் நடந்தது. இரவு 9 மணியளவில் கஜ (யானை) வாகன உற்சவம் நடந்தது. தங்கத்தால் செய்யப்பட்ட யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா நடந்தது.
7ம் நாளான நேற்று காலை மலையப்பசுவாமி, தங்க சூரியபிரபை வாகனத்தில் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு சந்திரபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதை தொடர்ந்து பிரமோற்சவத்தின் 8வது நாளான இன்று மகாதேரோட்டம் நடக்கிறது. இரவு ஹஸ்வ வாகனத்தில் மலையப்ப சுவாமி கல்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.