உத்தரகாண்ட் புதிய முதல்வர் இவர் தான்... பாஜக தலைவருக்கு ராஜ்பவனில் பதவியேற்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 10, 2021, 5:09 PM IST
Highlights

இதனைத்தொடர்ந்து ராஜ்பவனில் இன்று மாலை 4 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் திராத் சிங் ராவத்திற்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது திரிவேந்திர சிங் ராவத் முதலமைச்சராக பதவியேற்றார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சிக்குள் உட்கட்சி பூசல் வெடித்தது, முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என பாஜக எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். 

அடுத்த ஆண்டு அம்மாநிலத்தில் தேர்தல் வர உள்ள நிலையில், திரிவேந்திர சிங் ராவத் மீது அதிருப்தி உருவானதால் அவரை பதவி விலகக்கோரி பாஜக தலைமை உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் தேசியத் தலைவர் நட்டாவைச் சந்தித்த திரிவேந்திர சிங் ராவத் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

புதிய முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று காலை டேராடூனில் கூடியது. அதில் பாஜக மூத்த தலைவர் ராமன் சிங், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அங்கு அனைவரது ஒப்புதலுடன் திராத் சிங் ராவத் உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். 

இதனைத்தொடர்ந்து ராஜ்பவனில் இன்று மாலை 4 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் திராத் சிங் ராவத்திற்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தனக்கு இத்தகைய வாய்ப்பளித்த பிரதமர் மற்றும் பாஜகவிற்கு நன்றி தெரிவித்த திராத் சிங் ராவத், கடந்த 4 ஆண்டுகளில் செய்த நல்ல விஷயங்களை தொடர்வேன் என உறுதியளித்துள்ளார். 

click me!