
கண்டக்டரே கவனமாக இருங்க… டிக்கெட் வழங்கும் மிஷின் வெடித்து கண்டக்டர் படுகாயமாம்...
அரசு பஸ்ஸில் டிக்கெட் வழங்கும் மிஷின் வெடித்து கண்டக்டர் படுகாயம் அடைந்தார்.உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வெடித்து சிதறல்
உத்தரப்பிரதேச மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பஸ் ஒன்றில் நடத்துநராகப் பணிபுரிந்து வருபவர் நேத்ரா பால். இவர் வழக்கம் போல நேற்று காலை மதுராவில் இருந்து பிரேலி நகர் செல்லும் பஸ்ஸில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக அவர் கையில் இருந்த டிக்கெட் வழங்கும் எலெட்ரானிக் மிஷின் திடீரென்று வெடித்து சிதறியது.
கண்டக்டர் காயம்
இதில், நடத்துநர் நேத்ரா பாலுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அத்துடன் அந்த மெஷினும் முழுமையாக சேதமடைந்து, தீபிடித்து கருகி விட்டது. விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெடித்து சிதறிய டிக்கெட் வழங்கும் மிஷினை தயாரித்து வழங்கிய நிறுவனத்திடம் உரிய விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.