
பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் ஒரு சிறந்த சிந்தனையாளர். மக்கள் ஜனாதிபதியாகத் திகழ்ந்தவர். மிகச் சிறந்த சிந்தனையாளர். எளிமையை போதித்த ஆசிரியர் என்றெல்லாம் புகழாரம் சூட்டினார், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த தினத்தை ஒட்டி, ஞாயிற்றுக்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக, ராமேஸ்வரத்தில் இருந்து பள்ளி மாணவ மாணவியர் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றிருந்தனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கௌரவம் அளித்தார்.
அந்த மாணவர்களிடையே பேசிய ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் மிகச் சிறந்த தொலைநோக்குச் சிந்தனையாளர்களில் ஒருவர் அப்துல் கலாம் என்றார். நம் நாட்டின் ஏவுகணைத் தொழில்நுட்ப திட்டங்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். அவரை நாம் "இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று போற்றுகிறோம். அவர் உண்மையில் "மக்களின் ஜனாதிபதி'. அந்தப் புகழை அப்துல் கலாம் பெற்றுள்ளார். மிகச் சிறந்த விஞ்ஞானியாகவும், குடியசுத் தலைவராகவும், சிந்தனாவாதியாகவும் விளங்கிய அவரது அளப்பரிய சேவையை நம் நாடு ஒரு போதும் மறவாது என்று பேசினார்.
முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாமின் படத்துக்கு பூக்கள் தூவி, அஞ்சலி செலுத்தினார் ராம்நாத் கோவிந்த்.