‘சரக்கு’ அடிப்பது குறைஞ்சிடுச்சாம்! கிராமங்கள்ல ஜன்தன் வங்கிக் கணக்குல பணத்த போடுறாங்களாம்...!

First Published Oct 16, 2017, 5:43 PM IST
Highlights
jan dhan accounts keep villagers sober slow rural inflation a study


பிரதமரின் ஜன்தன் யோஜனா என்ற வங்கிக் கணக்குகளில், கிராமவாசிகள் பலரும் தங்கள் சேமிப்புப் பணத்தைப் போடுவதால், கிராமங்களில் மது குடிப்பது குறைந்துள்ளதாம்.  

பிரதமர் மோடி கொண்டு வந்த அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற ஜன் தன் திட்டத்தால், கிராமப் புறங்களில் வங்கிக் கணக்குகள் பெரும்பாலானவர்களுக்கும் துவங்கப்பட்டது. இந்தக் கணக்குகளில், கிராமப் பெண்கள் பெரும்பாலும் தங்கள் கைப் பணத்தை சேமிக்கத் துவங்கி விட்டனர். இதனால் வீடுகளில் கையிருப்பை மறைப்பதால், ஆண்கள் மது அருந்துவது, புகையிலை பொருட்களை உபயோகிப்பது போன்றவை குறைந்து விட்டதாம். இந்தத் தகவல்கள் எலாம், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் பொருளாதாரப் பிரிவு நடத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. 

இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்...  கிராமப்புறங்களில் இத்தகைய சேமிப்புப் பழக்கத்தால், பணவீக்கம் குறைவதற்கு வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, பிரதமரின் ஜன்தன் திட்டத்தால், கிராமங்களில் அதிக அளவில் இருக்கும் ரொக்க பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு, பணவீக்கத்தை குறைக்கும் என்று கூறப்பட்டது. இந்த ஆய்வு தெரிவிப்பதில் இருந்து, கிராமங்களில் 50 %க்கும் அதிகமான ஜன் தன் வங்கிக் கணக்குகளில் பகிரப்படும் சேமிப்பானது பணவீக்கத்தில் ஓரளவு குறைவை ஏற்படுத்தும். 

கடந்த நவம்பரில் திடீரென ரூபாய் நோட்டுகள் வாபஸ் என்ற நடவடிக்கையை எடுத்தார் மோடி. அதற்கு முன்னரே, ஜன் தன் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம் தொடங்கப்பட்டிருந்தாலும், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின்னரே  30 கோடிக்கும் அதிகமானவர்கள் ஜன்தன் கணக்கு துவக்கினர். 

10 மாநிலங்களில் மட்டும் 23 கோடிக்கும் அதிகமானோர் ஜன்தன் திட்டத்தில் இணைந்துள்ளனர். இது மொத்த கணக்குகளில் 75%. முதலிடத்தில் உள்ளது உத்தரப் பிரதேசம்தான். இங்கே 4.7 கோடிப் பேர் வங்கிக் கணக்கு துவங்கினர். அடுத்து, பீகார்- 3.2 கோடி, 3வது இடத்தில் உள்ள மேற்கு வங்கத்தில் 2.9 கோடிப் பேரும் வங்கிக் கணக்குகளைத் துவங்கியுள்ளனர். 

இந்த மூன்று மாநிலங்களுடன், இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில், ராஜஸ்தான், சட்டீஸ்கர், அசாம், ஒடிசா, ஜார்கண்ட், கர்நாடகா ஆகிய மாநிலங்களும் இடம் பெற்றுள்ளன. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின்னர், மக்கள் பணத்தை சிக்கனமாக செலவழிக்கத் துவங்கியுள்ளனராம். இதனால், அவர்களின் பழக்க வழக்கங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாம். இதனைக் கூறியுள்ள எஸ்பிஐயின் தலைமை பொருளாதார ஆலோசகர் சௌம்யகாண்டி கோஷ்,  மக்களின் இந்தப் போக்கால், மது, புகையிலை உள்ளிட்ட பொருள்கள் பயன்படுத்துவது குறைந்துள்ளது. ரொக்கமாக பணத்தை செலவிட்டு வந்த கிராமத்தவர்கள் பலர், கார்டுகள் மூலம் பண பரிவர்த்தனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்று கூறியுள்ளார். 

இவை எல்லாம் நாட்டின் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான். ஆனால் வழக்கம் போல், மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டிய தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் நிலைமை அப்படி ஒன்றும் இன்னும் சீரடையவில்லைதான்!

click me!