
தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே தற்கொலைக் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்து ஒன்பது பேர் உயிரிழந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி இன்று செவ்வாய்க்கிழமை கடும் எச்சரிக்கை விடுத்தார்.
பூட்டானின் திம்புவில் பேசிய அவர், “இதற்குப் பின்னால் உள்ள சதிகாரர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள். இதற்குப் பொறுப்பான அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்று ஆவேசமாகக் கூறினார்.
பூடான் நாட்டின் முன்னாள் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சக்கின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று காலை இரண்டு நாள் பயணமாக பூட்டானுக்குச் சென்றடைந்தார்.
திம்புவில் நடந்த பொது நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சி அளித்தது என்று குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை தாம் அறிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“இன்று ஒட்டுமொத்த தேசமும் அவர்களுடன் உறுதுணையாக நிற்கிறது. நேற்று இரவு முழுவதும் இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் அனைத்து அமைப்புகளுடனும் நான் தொடர்பில் இருந்தேன். அவர்கள் இந்தச் சதித்திட்டத்தின் வேரை நிச்சயமாகக் கண்டுபிடிப்பார்கள்,” என்று பிரதமர் மோடி உறுதியாகக் கூறினார்.
இதுவரை இந்தியில் பேசிக்கொண்டிருந்த பிரதமர் மோடி, ஒரு கட்டத்தில் திடீரென ஆங்கிலத்துக்கு மாறினார். “சம்பவத்துக்குப் பொறுப்பான அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” (All those responsible will be brought to justice) என்று ஆங்கிலத்தில் தெரிவித்தார்.
முன்னதாக, ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நாட்டு மக்களிடம் உரையாற்றியபோதுதான் பிரதமர் மோடி இதுபோல திடீரென இந்தியில் இருந்து ஆங்கிலத்துக்கு மாறிப் பேசினார். அப்போது, “இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் அடையாளம் கண்டு, கண்காணித்து, தண்டிக்கும்” என்று கூறினார்.
அதன் பிறகு சில வாரங்களிலேயே, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு, முப்படையினரின் ஒருங்கிணைப்புடன் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பதில் தாக்குதலை இந்தியா நடத்தியது குறிப்பிடத்தக்கது.
நேற்று (திங்கட்கிழமை) மாலை செங்கோட்டை அருகே மெதுவாகச் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது ஒரு தற்கொலைக் கார் குண்டுவெடிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.