
டெல்லி செங்கோட்டைக்கு நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று (திங்கள்கிழமை) மாலை சுபாஷ் மார்க் சிக்னல் அருகே நிறுத்தப்பட்டிருந்த Hyundai i20 கார் திடீரென வெடித்தது. இதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தது, 20 பேருக்கு மேல் காயமடைந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த சில நிமிடங்களில், அருகிலிருந்து மக்கள் பரபரப்பாக ஓடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளன. சமூக வலைதளங்களில் பரவியுள்ள அந்த வீடியோவில், வெடிப்பு ஏற்பட்ட சில விநாடிகளுக்குள் மக்கள் பீதி அடைந்து தங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடிச் செல்லும் காட்சிகள் தெளிவாக தெரிகின்றன. அந்த நொடிகளில் சிகப்பு கோட்டை அருகே நிலவிய பதட்டம் பரவலாக உணரப்பட்டது.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சல்மான் மற்றும் தேவேந்தர் எனும் இரு நபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தகவலின்படி, இவர்கள் முன்பு வெடித்த Hyundai i20 காரின் முந்தைய உரிமையாளர்களாக இருந்துள்ளனர். இதனால், வாகனத்தின் உரிமை மாற்றம் மற்றும் விற்பனைச் சான்றுகள் பற்றிய விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “எல்லா கோணங்களிலும் விசாரணை நடைபெறும். புறக்கணிக்கமாட்டோம்” என தெரிவித்தார். தற்போது தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) மற்றும் தேசிய பாதுகாப்பு படை (NSG) இணைந்து சம்பவ இடத்தில் சான்றுகள் சேகரித்து வருகின்றன.
இந்த வெடிப்பு ஒரு தீவிரவாதத் தாக்குதலா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பதற்கான உறுதி இன்னும் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகம் பொதுமக்களுக்கு விரைவில் வெளியிடப்படும் என கூறியுள்ளது. இதனால் டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.