
போலீஸ் நிலையத்துக்குள் சென்றாலே மனஅழுத்தம், பதற்றம், பயம், நடுக்கம் ஆகியவை தவறு செய்தவர்களுக்கு ஏற்படலாம். புகார் கொடுக்கச் செல்லும் மக்களுக்கு ஏன் ஏற்படனும்?.
மக்களின் நண்பன் என்று கூறிக்கொண்டால் மட்டும் போதுமா?, சூழலையும் உகந்ததாக மாற்ற வேண்டாமா?
மக்களுக்கு ஏற்ற வகையில், எளிதாக அனுகும் வகையில், போலீஸ் நிலையத்தை மாற்றி இருக்கிறார்கள், கேரள மாநிலம், கன்னூர் உள்ள சக்கரக்கல் போலீஸ் அதிகாரிகள்.
போலீல் நிலையத்துக்கு வருவோருக்கு பயத்தை போக்கும் வகையில் கேரள பாரம்பரிய இசையை மெலிதாக இசைக்கவிடுதல், பார்வையாளர்களுக்கு என தனி அறை, அதில் நூலகம், நாளேடுகள், வார இதழ்கள், மரக்கன்றுகள் வழங்குதல் என வித்தியாசமான அனுகு முறையால், இது போலீஸ் நிலையமா என மக்களை யோசிக்க வைத்துள்ளனர்.
ஒரு நேரத்தில், சக்கரக்கல் போலீஸ் நிலையம், அரசியல் மோதல்கள், கலவரம் என எப்போதும் பதற்றமும், கூச்சலும் நிறைந்த இடமாக இருந்தது.
இதனால், போலீஸ்நிலையம் அதிகமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மக்கள் எளிதாக வந்து செல்லும் இடமாக போலீஸ் நிலையத்தை மாற்ற அங்கு பணிபுரியும் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக பல கட்ட நடவடிக்கைகளை கையாண்டனர்.
முதலில் கேரள மாநிலத்தின் பாரம்பரிய இசையை போலீஸ் நிலையம் முழுவதும் மெலிதாக இசைக்கவிட்டு, புகார் கொடுக்க வரும் மக்களின், விசாரணைக்காக வருவோரின் பதற்றத்தையும், மனஅழுத்தத்தையும் தணித்தனர். இதனால், மக்கள்
போலீஸ் நிலையத்துக்கு வருவதை அச்சமாக நினைக்கவில்லை.
இந்நிலையில், மாவட்ட போலீஸ் எஸ்.பி. சிவா விக்ரம் கடந்த 8-ந்தேதி சக்கரக்கல் போலீஸ் நிலையத்தில் மற்றொரு வசதியை ஏற்படுத்தினார். அதாவது புரொஜெக்டருடன் கூடிய ஆடியோ சிஸ்டத்தை தொடக்கி வைத்தார்.
போலீஸ் நிலையத்தில் உள்ள பார்வையாளர்கள் அறையில் மக்கள் 5 பேருக்கு மேல் வந்தவுடன் புரொஜெக்டரில் சாலை விதிமுறைகள், குற்றங்கள் நடக்கும் முறைகள், பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பது, விபத்துக்களை தவிர்ப்பது குறித்து வீடியோ ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் போலீஸ் நிலையம் வரும் மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாகிறது.
மேலும் பார்வையாளர்கள் அமரும் இடங்களில் நாளேடுகள், வார ஏடுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கும் சிறிய நூலகம் ஆகியவையும் உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், இதைப் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சக்கரக்கல் போலீஸ் நிலையத்தின் துணை ஆய்வாளர் பி. பிஜூ கூறுகையில், “ அனைத்துக் கட்சிகளும் அமைதி நடவடிக்கையை எடுக்க முயறச்சிகள் நடந்த போது, எங்களுக்கு இந்த சிந்தனை தோன்றியது.
இதையடுத்து, போலீஸ் நிலையத்தை மக்கள் எளிதாக வந்துசெல்லும் இடமாக மாற்ற எண்ணி, புதிய விஷயங்களை செய்தோம். போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தினந்தோறும் இத்தனை புத்தகங்களை வாசிக்க வேண்டும், மேலும், ஒருவாரத்துக்குள் புத்தகத்தை வாசித்து, அது குறித்து விரிவான விளக்கத்தை எழுதிக்கொண்டு வரவேண்டும் என்று தண்டனை அளிக்கிறோம்.
சிலருக்கு புத்தகம் படிக்க விருப்பம் இல்லாத நபர்களுக்கு, விதைகளை வழங்கி, அதை வளர்த்து செடியாக்கி, கைப்படம் எடுத்து எங்களுக்கு வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.
புதுமை படைக்கும் இந்த போலீஸ் நிலையத்தை மக்களின் பாராட்டி வருகின்றனர்.