
அமைதியான, போர்பதற்றம் இல்லாத இடங்களில் பணிபுரியும் ராணுவ அதிகாரிகளுக்கு “இலவச ரேஷன்” வழங்கத் தேவையில்லை என்று 7-வது ஊதியக்குழு மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்தது. அது கடந்த 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
ராணுவ அதிகாரிகள் அனைவருக்கும் தங்களின் ஊதியத்தில் சாப்பாட்டுக்காக ரூ.96 நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. ராணுவம், கப்பல்படை, விமானப்படை ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு உணவு தானியங்கள், இறைச்சி, பழங்கள், காய்கறிகள், மளிகைபொருட்கள், சமையல் செய்ய ஆட்கள் என அனைத்தும் இலவசமாக அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் அளித்த அறிக்கையில், ராணுவத்தில் பணிபுரியும் சில உயர் அதிகாரிகள், உணவுப்பொருட்கள் கொள்முதல் விசயத்தில் ஏராளமான முறைகேடுகளை செய்துள்ளனர் என்று தெரிவித்தது. 82 சதவீத உணவுப்பொருட்கள் கொள்முதல் என்பது, நிர்ணயிக்கப்பட்ட விலையைக்காட்டிலும் குறைந்த விலையிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 36 சதவீத உணவுப் பொருட்களுக்கு மிக அதிகமான விலை கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது. இதையடுத்து, பல ராணுவ அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்.
இதனால், ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் முறையான இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் முறையை மத்திய அரசு கடந்த 1-ந்தேதி முதல் நிறுத்திவிட்டது. இனிமேல், இந்த 96 ரூபாய், உள்ளிட்ட ஏதும் வழங்கப்படாது. இந்த புதிய விதிமுறை என்பது மிகவும் போர்பதற்றம் நிறைந்த எல்லைப்பகுதிகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பொருந்தாது.
இது ராணுவ வீரர்கள் மத்தியில் மிகப்பெரிய கசப்புணர்வையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மத்தியஅரசின் இந்த முடிவுக்கு பல்வேறு ராணுவ அதிகாரிகளும் சமூக ஊடகங்களில் கடும் அதிருப்தி தெரிவித்து, அலவன்ஸ் தொகை போதாது என்று வேதனை தெரிவித்தனர். ஜி.எஸ்.டி. வரிவிதிக்கப்பட்டுள்ளதால், சந்தையில் விலையில் உணவுப்பொருட்கள் வாங்கும்போது, அதிகமாக செலவாகும் எனத் தெரிவித்தனர்.