
நாட்டில் உள்ள பல்கலைக்கழககங்கள், மாநில அரசு உதவி பெறும் கல்லூரிகள், மத்திய அரசின் பல்கலைக்கழங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோருக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலாகப் போகிறது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைகளின்படி 22 முதல் 28 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்படலாம் எனத்தெரிகிறது. இதற்கு மத்திய அமைச்சரவை சம்மதம் கொடுத்தால், கல்லூரி ஆசிரியர்கள் “காட்டில் பண மழையாக” இருக்கும்.
இதற்கு முன் கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அதன்பின், பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர்கள்,பேராசிரியர்கள், துணை வேந்தர்கள் ஆகியோருக்கு ஊதிய உயர்வு குறித்து ஆய்வு செய்ய கடந்த ஆண்டு யு.ஜி.சி. உறுப்பினர் தலைமையில் மத்தியஅரசு குழு அமைத்தது.
அந்த குழு தனது பரிந்துரைகளை கடந்த பிப்ரவரி மாதம் அளித்தது. 7-வது ஊதியக்குழுவின் அறிக்கையை அரசு அளித்தபின்பும், அரசு அமல்படுத்தாதது குறித்து பல்வேறு கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் இறங்கப்போவதாக மிரட்டல் விடுத்து வந்தன. இந்த சூழலில் மத்தியஅரசு விரைவில் ஊதிய உயர்வு அறிக்கைக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் மூத்த உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் மத்திய அமைச்சரவை பரிசீலிக்க உள்ளது. இதில் பெரும்பாலும் மாற்றம் இல்லாமல் ஏற்றுக்கொள்ளக்கூடும்.
அவ்வாறு ஏற்றுக்கொண்டால், கல்லூரி ஆசிரியர்களுக்கு 22 முதல் 28 சதவீதம் ஊதிய உயர்வு இருக்கும். ஆனால், “அலவன்ஸ்” குறித்து உடனடியாக முடிவு ஏதும் எடுக்கப்படாது” என்று தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரையின் படி, உதவிப் பேராசிரியர்களுக்கு ஊதியம் ரூ.10 ஆயிரத்து 396 உயரும். கிரேடு சம்பளம் ரூ.6 ஆயிரம் அதிகரிக்கும்.
இணை பேராசிரியர்களுக்கு ரூ.23 ஆயிரத்து 662 ஊதியம் உயரும். பேராசிரியர்களுக்கு 24 சதவீதமும், துணைவேந்தர்களுக்கு 28சதவீதமும் உயரக்கூடும்
இந்த ஊதிய உயர்வு மாநில அரசின் உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழங்கள், மத்தியஅரசின் பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி, என்.ஐ.டி., உள்ளிட்டவற்றில் பணிபுரிந்து வரும் போராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் பயன் பெறுவார்கள்.
இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வந்தால், ரூ. 70 ஆயிரம் கோடி நிதி தேவைப்படும். இதை மத்திய, மாநில அரசுகள் சரிபாதியாக பிரித்து ஊழியர்களுக்கு வழங்கும்.