
தமிழக மீனவர்களுக்கு கோடிக் கணக்கில் அபராதம் விதிக்கப்போவதாக இலங்கை அரசு கூறுவது இந்தியாவை சீண்டிப் பார்க்கும் செயலாகும். இதை இந்தியா கண்டிக்காமல் வேடிக்கைப் பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இலங்கை அரசின் அபராத விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இம்மாதம் 14 ஆம் தேதி தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படுவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை அரசு, அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களுக்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு தமிழகத்தின் பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இலங்கை அரசின் இந்த புதிய சட்டத்தை கண்டிக்காமல் இந்தியா வேடிக்கை பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கை அரசின் இந்த புதிய சட்டத்தால் நாகை மாவட்டம் முதல் தூத்துக்குடி மாவட்டம் வரையுள்ள, வங்கக்கடலில் மீன்பிடிக்கும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அதை பாதுகாத்துக் கொள்வதற்காகவே இப்போராட்டத்தை இராமேஸ்வரம் மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதாக கூறுவதே அபத்தம்.
குறுகிய கடல் எல்லை கொண்ட பகுதிகளில் ஒரு நாட்டு மீனவர்கள் இன்னொரு நாட்டின் எல்லைக்குச் சென்று மீன் பிடிப்பது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில், தமிழக மீனவர்களுக்கு கோடிக் கணக்கில் அபராதம் விதிக்கப்போவதாக இலங்கை அரசு கூறுவது இந்தியாவை சீண்டிப் பார்க்கும் செயலாகும். இதை இந்தியா கண்டிக்காமல் வேடிக்கைப் பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிப்பதை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது மட்டும் தான் இந்த சிக்கலுக்கு தீர்வாக அமையும்.
இந்த நிலையில் இலங்கை அரசு தன்னிச்சையாக இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றி இருப்பது முறையல்ல. இந்த சட்டத்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பறிக்கப்படும்.
எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் இதுவரை 13 முறை பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், பயன் இல்லை.
இந்த விவகாரம் மேலும் சிக்கலாக மாறுவதற்குள் இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை திரும்பப்பெறச் செய்ய வேண்டும்.
இலங்கைச் சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசு கடுமையான அரசியல் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.