
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் குடிமகன் ஒருவர் போதையில் வைத்த தீயில் சிக்கி 27 பைக்குகளும், 1 லோடு ஆட்டோவும் முற்றிலும் எரிந்து நாசமாகியது.
மகாரஷ்ட்ராவின் புனே மாவட்டத்தில் உள்ள ஜனதா வசந்த் என்ற குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலையில் நின்று கொண்டிருந்த பைக்குகளில் ஒரு பைக் மட்டும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனையடுத்து, தீ மளமளவென்று அடுத்துடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளுக்கும் பரவியது. அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் வந்து தீயை அணைப்பதற்குள் 27 பைக்குகள், 2 சைக்கிள்கள் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்ட்டெயினரில் இருந்த 1 லோடு ஆட்டோவும் எரிந்து நாசமாகியது.
இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில் நிலேஷ் பாடீல் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, தான் குடி போதையில் ஒரே ஒரு பைக்குக்கு மட்டும் தீ வைத்ததாக ஒப்புக் கொண்டார் . இதையடுத்து அவரை நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி போலீசார் சிறையிலடைத்தனர்.
விபத்து நடந்த இந்த பகுதியில் தனக்கு விரோதிகள் யாராவது இருந்தால் அவர்களது பைக்கை தீ வைத்து எரித்து விடும் பழக்கம் அவருக்கு உள்ளதாகவும், அதன்படி நிலேஷ் பாடீல் ஒரு பைக்கிற்கு வைத்த தீயால் இத்தனை வாகனங்கள் எரிந்து சாம்பலானதாக போலீசார் தெரிவித்தனர்.