
மருத்துவம், பொறியல், மற்றும் ஐ.ஐ.டி. உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே பயிற்சி பெறும் வகையில், 32 கல்வி தொடர்பான சேனல்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேனல்களில் “ மிகவும் உயர்தரமான கல்வி நிகழ்ச்சிகள்” மட்டுேம ஒளிபரப்பாகும். “உயர்கல்வியில் டிஜிட்டல்மயம் தொடக்கத்துக்கான மாநாட்டில்” குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு இந்த சேனல்களை முறைப்படி தொடங்கி வைத்தார். “ஸ்வயம் பிரபா” என்ற தலைப்பில் இந்த சேனல்கள் அனைத்தும் ஒளிபரப்பாக உள்ளன.
இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நாட்டில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள், மருத்துவம், பொறியியல் மற்றும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க விரும்புகிறார்கள். இதற்காக ஏராளமான பணம் செலவு செய்து, பயிற்சி நிறுவனங்களில் சேர்கிறார்கள். இதைத் தவிர்க்கவும், ஏழை மாணவர்களும் பயன் பெறும் வகையில் வீட்டில் இருந்தே பயிற்சி பெறும் வகையில் 32 சேனல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். “ஸ்வயம் பிரபா” என்ற தலைப்பில் இந்த சேனல்கள் ஒளிபரப்பாகும்.
இந்த சேனல்களில் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் கல்வி தொடர்பான புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். அதே நிகழ்ச்சிகள் நாள் ஒன்றுக்கு 6 முறை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பபப்டும். அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ளும் விதத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நேரத்தில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.
இந்த சேனலில் வரலாறு, அறிவியல், கணக்குப்பதிவியில், புவியியல், சமூக அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து பாடங்கள் குறித்தும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களும் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்கப்பட்டு, அவர்கள் நுழைவுத்தேர்வை எளிதாக எழுத தயார் செய்யப்படும்.
மேலும், ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஐ.ஐ.டி.-பி.ஏ.எல். மாடல்கள் பாடங்களும் நடத்தப்படும்.மேலும், 11 மற்றும் 12ம் வகுப்புபாடங்களும் நடத்தப்பட்டு, ஐ.ஐ.டி. தேர்வுகளை எளிதாக எழுத பயிற்சி அளிக்கப்படும். டி.டி.எச். ஒளிபரப்பு மூலம் இந்த சேனல்களை மாணவர்கள் காணலாம்.
இந்த சேனல்களில் வரும் நிகழ்ச்சிகளில் ஐ.ஐ.டி. நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்குபெற்று நேரடியாக மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். மேலும், பாடங்கள், கேள்விகளையும் தயார் செய்து மாணவர்களுக்கு அளிக்கப்படும். ஏதேனும் சந்தேகம் இருந்தால், மாணவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நேரலையில் கேள்விகள் கேட்கலாம்” எனத் தெரிவித்தார்.