‘கனவுக்கன்னி’ ஹேமமாலினியின் சுயசரிதை நூலுக்கு முன்னுரை எழுதியவர் யார் தெரியுமா? நம்ம மோடிதான்!

First Published Oct 14, 2017, 2:01 PM IST
Highlights
this is what pm modi did for dreamgirl hema malini


தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் பிறந்து, கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்குச் சென்று வடக்கே இருந்தவர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டு கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் நடிகை ஹேமமாலினி. அவரது வாழ்க்கை வரலாறு புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருக்கிறார் பிரதமர் மோடி!

நடிகை ஹேமமாலினிக்கு வரும் 16ஆம் தேதி 69 வயதாகிறது. தற்போது அவர் பாஜக., சார்பில் நாடாளுமன்ற எம்.பி.யாக உள்ளார். சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலான திரையுலக அனுபவம் கொண்டவர் ஹேமமாலினி. அப்படி அவர் தனது வாழ்வில் சந்தித்த நபர்கள், அனுபவங்கள், திரைத்துரை, அரசியல், சமூகம் என பல்வேறு நிகழ்வுகளை நினைவில் கொண்டு, தன் அனுபவங்களைச் சொல்லச் சொல்ல... அவற்றை ஒரு புத்தகமாக வடித்துள்ளார் ஸ்டார்ட்டஸ் இதழின் முன்னாள் ஆசிரியரும் தயாரிப்பாளருமான ராம் கமல் முகர்ஜி.  

அவர் எழுதியுள்ள ஹேமமாலினியின் சுயசரிதை நூல் வெளியீடு, வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நூலின் முக்கிய அம்சம், நூலுக்கான முன்னுரையை எழுதியிருப்பவர்  பிரதமர் நரேந்திர மோடி என்பதுதான்! 

நூல் வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர் ராம் கமல் முகர்ஜி, ஊடகத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் இது குறித்துக் கூறியபோது... ஹேமமாலினி திரையுலகிற்கு நடிக்க வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கௌரவிக்கும் பொருட்டு, அவரது சுயசரிதை நூல் வெளியிடப்படவுள்ளது. இந்த நூல் நிச்சயமாக அனைவரின் வரவேற்பையும் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த நூலின் சிறப்பம்சம், முன்னுரையை பிரதமர் மோடி எழுதியிருப்பதுதான். 

நமது பிரதமர் மோடி, நடிகை ஹேமமாலினி மீது வைத்துள்ள மெல்லிய உணர்வுகளை மிகச் சுருக்கமாக இதில் குறிப்பிட்டுள்ளார். மிகச் சுருக்கமாக, சுவையாக எழுதியுள்ளார். இது ஹேமமாலினிக்கு மட்டுமான கௌரவமல்ல, எழுதிய எனக்கும் அவர் அளித்த ஒரு கௌரவம். குறிப்பாகச் சொல்லப்போனால், ஒரு பாலிவுட் நடிகை குறித்த புத்தகத்துக்கு மிகவும் துடிப்பாக செயல்படும் ஒரு பிரதமர் முதல்முதலில் எழுதியுள்ள முன்னுரை இது என்று கூறலாம். 

மோடிக்கு, ஹேமமாலினியின் பாரம்பரிய நடனம், இசை ஆகியவற்றின் மீதும், அவற்றை அவர் எப்படி சர்வதேச அளவுக்குக் கொண்டு செல்கிறார் என்பதன் மீதும் ஒரு பற்று இருந்துள்ளது. இதுதான் ஹேமமாலினியின் தனித்துவம் என்று கூறலாம். 

அவர்  தனது கடின வேலைப்பளுவுக்கு மத்தியில் இதை எழுதிக் கொடுத்துள்ளார். மோடி, எந்த நேரமும் நாட்டின் வளர்ச்சியையே குறிக்கோளாகக் கொண்டு இடையறாது உழைத்து வருகிறார். அவர் எந்தத் துறைக்கும் பாகுபாடு காட்டாமல் சினிமா நட்சத்திரத்தின்  சுயசரிதைக்கும் முன்னுரை எழுதிக் கொடுத்திருக்கிறார். இது, அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது...” என்று ராம் கமல் முகர்ஜி கூறியுள்ளார். 

நடிகை ஹேமமாலினி 1968ஆம்ஆண்டு ஷப்னோங் கா செளதாகர் படத்தின் மூலம்  பாலிவுட்டில் அறிமுகமானார். பெண் சூப்பர் ஸ்டார் எனச் சொல்லுமளவு வெற்றிக் கொடி நாட்டினார். பின்னாளில் அரசியல் ஆசை ஏற்பட்டு, 1999ல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து குர்தாஸ்பூர் தொகுதியில் அரசியல் பிரவேசத்தைத் துவக்கினார்.  தற்போது மதுரா தொகுதியின் எம்.பி.யாக உள்ளார் ஹேமமாலினி.

click me!