‘எதிர்ப்போரை எல்லாம் கொலை செய்யும் போக்கு நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது’... தபோல்கர் வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கருத்து!

First Published Oct 14, 2017, 12:13 PM IST
Highlights
Dangerous Trend Of Eliminating All Opposition Liberal Values Says Bombay High Court


எதிர்ப்போரை எல்லாம் கொலை செய்யும் போக்கு நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எழுத்தாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

தபோல்கர், பன்சாரே

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து மகாராஷ்டிராவில் எழுத்தாளர்கள் தபோல்கர், பன்சாரே உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதையடுத்து இருவருக்கும் பலமுறை கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நரேந்திர தபோல்கர் கடந்த 2013 ஆகஸ்ட் 20-ந்தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பன்சாரே மீது கடந்த 2015 பிப்ரவரி 16-ந்தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 4 நாட்களில் உயிரிழந்தார்.

சிபிஐ விசாரணை

இந்த கொலைகள் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தபோல்கர் வழக்கில் சாரங் அகோல்கர் மற்றும் வினய் பவார் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இருவரும் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், தபோல்கர் மற்றும் பன்சாரே தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், தபோல்கர், பன்சாரே கொலையில் `சனாதன் சன்ஸ்தா' என்ற அமைப்புக்கு தொடர்பு உள்ளது. ஆனால் இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை ஏதும் நடத்தவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த இரு கொலை வழக்குகளில் சிபிஐ அதிகாரிகள் தங்களது அறிக்கையை சமர்ப்பித்து இருந்தனர்.

2 நீதிபதிகள் அமர்வு

இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.சி. தர்மாதிகாரி மற்றும் விபா கன்கன்வாடி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது-

எதிர்ப்பவர்களை எல்லாம் கொல்லும் போக்கு நாட்டில் தற்போது பரவி வருகிறது. இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக இது அமைந்துள்ளது. வருங்காலத்தில் மேலும் சிலர் தாக்குதலுக்கு ஆளாவார்களா?. சுதந்திரமான கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. அவ்வாறு சொந்த கருத்தை கூறுவோர் தாக்கப்பட்டு வருகின்றனர்.

குற்றவாளிகள் தலைமறைவு

சிந்தனையார்கள் மட்டுமின்றி கருத்து உரிமையில் நம்பிக்கை கொண்ட தனி நபர்கள், அமைப்புகளும் குறி வைக்கப்படுகின்றனர். ‘எனக்கு எதிராக யாரும் கருத்து தெரிவித்தால், அந்த நபரை கட்டாயமாக நான் கொலை செய்வேன்’ என்பதுபோன்று இப்போது தாக்குதல்கள் நடக்கின்றன. சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இருப்பினும், முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாகவே இருக்கின்றனர். ஒவ்வொரு முறை இந்த வழக்கை ஒத்திவைக்கும் போது, விலை மதிப்பற்ற உயிர்கள் கொல்லப்படுகின்றன.

கோரிக்கை நிராகரிப்பு

தபோல்கர், பன்சாரேவின் கொள்கைகளுடன் ஒத்துப் போகும் நபர் (கவுரி லங்கேஷ்) பெங்களூருவில் கொல்லப்பட்டுள்ளார். வருங்காலத்தில் அவரைப் போன்றவர்கள் மீது தாக்குதல் நடைபெறாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. குற்றம் இழைத்தவர்கள் தாங்கள் வலிமையாக இருக்கிறோம் என்று நினைத்தால், அதனை ஒரு சவாலாக புலனாய்வு அமைப்புகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். விசாரணை முறையை மாற்றி, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொலைகாரர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அத்துடன் சனாதன் சன்ஸ்தாவை விசாரிக்க வேண்டும் என்ற தபோல்கர் தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், சிபிஐ விசாரணை குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்துள்ளது. சனாதன் சன்ஸ்தாவுக்கு இந்த கொலைகளில் தொடர்பிருக்கக் கூடும் என்ற கோணத்திலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

click me!