
பெங்களூரில் பெய்த மழையால் உருவான மெகா பள்ளத்தை சரி செய்யக்கோரி, பள்ளத்தில் கடல் கன்னியை அமரவைத்து நூதன போராட்டம் நடத்தினர். இதை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
கனமழை
பெங்களூரில் சாலையில் 15 ஆயிரம் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் உருவான மெகா பள்ளத்தில் விழுந்து 8 பேர் வரை சமீபத்த பெய்த மழையின் போது இறந்துள்ளனர். இதனால், சாலையில் ஏற்பட்ட பள்ளங்களுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது.
நாட்டின் ஐ.டி.தலைநகர் என புகழப்படும் பெங்களூரில் கடந்த மாதத்தில் இருந்து அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் தரமற்ற சாலைகளால் மெகா பள்ளும் ஆங்காங்கே உருவாகியுள்ளது. சாலை பள்ளங்கள் காரணமாக நகரில் விபத்துகள் அதிகரித்துள்ளன. சாலை பள்ளங்களில் விழுந்தோ, அல்லது அதை தவிர்க்க முற்பட்டு வாகனத்தை திடீரென திருப்பும்போது பிற வாகனங்கள் இடித்தோ அதிக அளவில் விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்துக்களில் இது வரை 8 பேர் பலியாக உள்ளனர். பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.
மக்கள் போராட்டம்
சாலை பள்ளங்களை மூட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் பெங்களூரில் பல இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். பெங்களூரின் மையப்பகுதியான கப்பன் பார்க் ஜங்சன் சாலை மட்டும் மழை பள்ளத்தில் இருந்து தப்பி உள்ளது. கப்பன் பார்க் பகுதியில் ஓவிய கலைஞர்கள் இணைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் சாலை பள்ளத்தில் குளம் போல தண்ணீர் வரைந்து, அதில் 'கடல் கன்னி' போன்ற வேடமணிந்த ஒரு அழகிய இளம்பெண் குளிக்கச் செல்வதை போன்று டிராமா நடத்தப்பட்டது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். சில சாலை குளங்களில் விடப்பட்ட இருந்த பொம்மை முதலைகளும் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பொய் பிரசாரம்
இந்தநிலையில் கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையாவோ, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். "பெங்களூரில் சாலை பள்ளங்களால் 8 பேர் உயிரிழந்துள்ளனரே" என்ற நிருபர்கள் கேள்விக்கு, "சாலை பள்ளங்களால் இல்லை, சாலை விபத்துகளால் அவர்கள் இறந்தனர்" என்று சித்தராமையாய பதிலளித்தார்.
பெங்களூர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் இன்னும் ஒருபடி மேலேபோய், ஆங்கில ஊடகங்கள், பெங்களூரின் நற்பெயரை கெடுக்க இதுபோன்ற பிரசாரங்கள் நடத்துவதாக தெரிவித்தார்