தொடர்ச்சியாக 3வது நாள்.. இந்தியாவை மிரட்டும் கொரோனா.. தினமும் புதிய உச்சத்தை தொடும் பாதிப்பு

By karthikeyan VFirst Published May 24, 2020, 2:32 PM IST
Highlights

இந்தியாவில் தொடர்ச்சியாக மூன்றாவது தினமாக 6000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தான் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் தினமும் 2500க்கும் அதிகமான பாதிப்பு கண்டறியப்பட்டுவருகிறது.

அதனால் தினமும் தேசியளவில் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டிவருகிறது. வியாழன் - வெள்ளி(காலை 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை) 24 மணி நேரத்தில் 6088 பேர் பாதிக்கப்பட்டனர். வெள்ளி - சனிக்கிழமை இடையேயான 24 மணி நேரத்தில் 6654 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 6767 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 1,31,868ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் உறுதியான 6,767 தான். இதுவரை தேசியளவில் 54,441 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 73,560 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 3,869ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 47,190 பேரும் அதற்கடுத்தபடியாக தமிழ்நாட்டில் 15,512 பேரும் குஜராத்தில் 13,669 பேரும் டெல்லியில் 12,910 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கம், தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், பீஹார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு பெரியளவில் இல்லை. இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா தான் பெரும் அச்சுறுத்தலாக திகழ்கிறது.
 

click me!