
ஆட்டிசம் , மனநோயால், புத்திசுவாதீனம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள், ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலையில் இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சட்டம்
மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் அரசு வேலை வாய்ப்பில் 3 முதல் 4 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் என்ற பட்டியலில் இதற்கு முன் 7 பிரிவுகள் சேர்க்ப்பட்டு இருந்த நிலையில், புதிய சட்டத்தில் 21 பிரிவுகளாக, அதாவது 21 பிரிவிலான பாதிப்புக்கு உள்ளானவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
உதவியாளர்கள் பணி
இது தொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தயார் செய்துள்ள வரைவு சட்டத்தில், அரசு பணி காலியிடங்களில் அளிக்கப்படும் இட ஒதுக்கீடுகள், வயது வரம்பு ஆகியவை குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த குறைபாடு உள்ள நபர்களுக்கு அரசில் உதவியாளர்கள் பணி முதல் நிர்வாக ரீதியான பணிகள் வரை ஒதுக்கப்பட உள்ளன.
40 சதவீதம் குறைவாக
இந்த உடல்நலக் குறைபாடுக்கு வரம்பு என்பது 40 சதவீதத்துக்கும் அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும், அவ்வாறு இருந்தால் மட்டுமே அரசுப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், நேரடியாக பணிக்கு தேர்வாகும் போது, ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டில் இதுபோன்ற குறைபாடு உள்ள நபர்களுக்காக 4 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படும்.
இதில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு என்பது, பார்வைக்குறைபாடு, குறைந்த பார்வை உள்ளவர்கள், கேட்டல் குறைபாடு, தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்படும்.
ஆசிட் வீச்சு
மேலும், இதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டு சரியானவர்கள், காது கேளாமை, பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இந்த பிரிவுகளுக்கு இடையிலான வயது தளர்த்தல் என்பது 10 முதல் 13 வயது வரை இருக்கும்.
இது தொடர்பான வரைவு கொள்கை அடுத்த 15 நாட்களுக்குள் அனைத்து மத்திய அரசு துறைகள் அனைத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டு, கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டு, அதன்பின் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.